ஐபிஎல்லில் ஏலம் போகாதவர் டி20யில் 19 சிக்சர் விளாசி ஃபின் ஆலன் அபாரம்: கெயில் சாதனை முறியடிப்பு

ஓக்லேண்ட்: ஐபிஎல்லில் ஏலம் போகாத நியுசிலாந்து கிரிக்கெட் வீரர் ஃபின் ஆலன், அமெரிக்காவில் நடந்து வரும் டி20 போட்டித் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் ஓக்லேண்ட் நகரில், மேஜர் லீக் கிரிக்கெட் டி20 போட்டிகள் நடந்து வருகின்றன. இத்தொடரில், சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணிக்காக நியுசிலாந்து வீரர் ஃபின் ஆலன் ஆடி வருகிறார். வாஷிங்டன் பிரீடம் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணிக்காக ஃபின் ஆலன் களமிறங்கினார்.

அவர், 51 பந்துகளை மட்டுமே சந்தித்து 151 ரன்களை வேட்டையாடினார். அவரது ஸ்டிரைக் ரேட், 296. வெறும் 34 பந்துகளில் சதம் விளாசிய அவர், 49 பந்துகளில் 150 ரன்களை குவித்தார். இதன் மூலம், டி20 போட்டிகளில் அதிவிரைவாக 150 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். தவிர, அப்போட்டியில் ஃபின் ஆலன் 19 சிக்சர்களை வெளுத்திருந்தார். இதன் மூலம், டி20 போட்டியில் அதிகபட்சமாக 18 சிக்சர்கள் அடித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இந்தியாவில் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டிகளுக்காக, 6 மாதங்களுக்கு முன் நடந்த ஏலத்தின்போது, ஃபின் ஆலனுக்கு அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. அதே ஏலத்தில் இந்தியாவின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ரூ. 27 கோடிக்கு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தவிர, ஷ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் அணியால், ரூ. 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post ஐபிஎல்லில் ஏலம் போகாதவர் டி20யில் 19 சிக்சர் விளாசி ஃபின் ஆலன் அபாரம்: கெயில் சாதனை முறியடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: