தமிழ்நாட்டில் 25 இடங்களில் கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (13.06.2025) சென்னையில், மகப்பேறு மயக்கவியல் தர மேம்பாட்டிற்கான மருத்துவ பயிலரங்கத்தினை தொடங்கி வைத்து, மயக்கவியல் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி, விழா பேரூரையாற்றினார்கள். பிறகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மகப்பேறு இறப்பு – சிசு இறப்பு விகிதம் குறைத்தல்

மக்கள் நல்வாழ்வுத்துறையில் தொடர்ந்து மகப்பேறு காலங்களில் தாய்மார்கள் மரணங்களை குறைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, இந்த அரசு பொறுப்பேற்ற நாள்முதல் மகப்பேறு இறப்பு விகிதத்தை மிகப் பெரிய அளவில் தொடர்ந்து ஆண்டு தோறும் குறைந்து வருகிற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்ற 2021-22 இல் ஒரு இலட்சம் பிறப்புகளுக்கு தாய்மார்களின் இறப்பு விகிதம் 90.5 ஆக இருந்தது. 2022-23 இல் இத்துறையின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக 52 ஆக குறைந்தது. 2023-24 இல் 45.5 என்கின்ற அளவில் குறைந்து, ஒரு மகிழ்ச்சியான மனநிலையை தந்தது. கடந்த ஆண்டு இன்னமும் சரிந்து 39.6 ஆக குறைந்திருக்கிறது. அதேபோல் குழந்தை மரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 2021-22 இல் 10.4 ஆக இருந்தது. 2022-23 இல் 10.2 ஆக குறைந்தது. 2023-24 இல் 8.2 என்கின்ற அளவில் குறைந்து மகிழ்ச்சியை தந்தது. கடந்த ஆண்டு 2024-25 இல் 7.4 ஆக குறைந்திருக்கிறது. ஆக மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு மரண விகிதங்களை மேலும் குறைத்திடும் வகையில் இத்துறை சார்பில் மகப்பேறியியல் மருத்துவர்களுக்கான பயிலரங்கங்கள், அவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் ஏற்கெனவே நடத்தப்பட்டது.

அதேபோல் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கான தனியாக பயிலரங்கள் பல்வேறு அமர்வுகளின் மூலம் நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்றைக்கு மகப்பேறு மருத்துவத்திற்கு மிகப்பெரிய தொடர்புடைய மயக்கவியல் துறையில் 129 மருத்துவர்கள் பங்கேற்றிருக்கின்ற பயிலரங்கம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மயக்கவியல் மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள் இந்த மூன்று பிரிவு மருத்துவர்களுக்கான பயிலரங்கத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் அவர்களுக்கு இடையே உள்ள சந்தேகங்களை போக்கிக் கொள்ள வகையிலான பல்வேறு நிகழ்வுகளின் மூலம் நிச்சயம் அடுத்தடுத்த ஆண்டுகளில் மகப்பேறு இறப்பு விகிதமும், குழந்தைகளுக்கான இறப்பு விகிதமும் வெகுவாக குறைந்து பூஜ்ஜிய நிலைக்கு செல்லும் என்று கருதுகிறோம்.

மயக்க மருந்து மற்றும் அது தொடர்பான சேவைகள், மகப்பேறு இறப்பு மற்றும் அது தொடர்பான நோய்களை குறைப்பதில் மிகப் பெரிய பங்காற்றி வருகிறது. புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு அம்சங்களினால் தற்போது மயக்க மருந்து நிபுணர்களால் மேம்பட்ட மயக்க மருந்து சேவைகளை மகப்பேறுவிற்காக வருகின்ற தாய்மார்களுக்கு அளிக்க முடியும். மயக்க மருந்தியல் துறையில் தற்போது தேவைக்கு ஏற்ப, புதிய முறைகள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் மயக்க மருந்து நிபுணர்களுக்கு அது குறித்தான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அப்பயிற்சி வழங்கப்படும் காரணத்தினால் அவர்களுடைய திறன்கள் மேம்படுகிறது. மகப்பேறு இறப்பு மற்றும் நோய்களை தடுப்பதில் இந்த பயிலரங்கத்தில் அவர்கள் பெறுகின்ற பயிற்சி பெரும்பங்கு வகிக்க இருக்கிறது. அந்த வகையில் இக்கருத்தரங்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புதல்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநரக கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் வகையில் இன்று பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னாள் தமிழ்நாட்டில் இருந்த ஒட்டுமொத்த காலிப்பணியிடங்களை நிரப்பும் முயற்சியாக 2642 மருத்துவர் பணியிடங்கள் ஒரே நாளில் நிரப்பப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பணி ஆணைகள் தரப்பட்டது. பணி ஆணைகள் தரப்படும்போது இந்தியாவில் முதன்முறையாக அவர்களுக்கு கலந்தாய்வு வைக்கப்பட்டு அவரவர் விரும்பும் இடங்களுக்கே பணிஆணைகள் தரப்பட்டது.

இதில் தேர்வு செய்யப்பட்ட 2642 மருத்துவர்களில் முதுநிலை மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டார மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு பிரிவுகளில் மாற்றம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று மகப்பேறியியல் மருத்துவர்கள் 46 பேரும், மயக்கவியல் மருத்துவர்கள் 48 பேரும், குழந்தைகள் நல மருத்துவர்கள் 62 பேரும், ஆக 154 சிறப்பு மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆக இத்துறையில் மகப்பேறு மரண விகிதத்தையும், குழந்தைகள் இறப்பு விகிதத்தையும் குறைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் இத்துறை செய்து வருகிறது.

மருத்துவ கட்டமைப்புகள் திறந்து வைத்தல்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் தொடர்ந்து தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் அவர்கள் டெல்லிக்கு சென்றிருந்தபோது, டெல்லி ஆம்ஆத்மி மொஹல்லா (Aam Aadmi Mohalla Clinic) எனும் மருத்துவ கிளினிக்கை பார்த்து மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் தொடங்கப்படும் இம்மருத்துவமனைகளினால் மக்கள் பயன்பெறுகிறார்கள் என்கின்ற நிலை அறிந்து, தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் 708 நகர்ப்புற நலவாழ்வு மையம் அமையும் என்று அறிவித்தார்கள். ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர், ஒரு சுகாதார ஆய்வாளர் என்கின்ற பணியாளர்களோடு 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமையும் என அறிவித்து, அறிவிக்கப்பட்ட ஒரே ஆண்டில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை சென்னையில் இருந்து முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட அம்மருத்துவமனைகள் தற்போது மிகப் பெரிய அளவில் பயன்பெற்று வருகிறது. மீதமிருந்து 208 மருத்துவமனைகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடப்பற்றாக்குறை, இடம் கண்டறிவதில் ஏற்பட்ட காலதாமத்தினால் அந்தப் பணிகளும் முடிவுற்று 208 மருத்துவமனைகள் தற்போது திறக்கும் தருவாயில் உள்ளது. அதற்கான மருத்துவப் பணியாளர்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் (District Health Society) மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது.

அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிலான அரசு பொறுப்பேற்றபிறகு, 50 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக அறிவித்து அதற்கும் பணியாளர்களை நியமிக்கும் பணிகள் இன்னும் 10 நாட்களுக்குள் முடிவுறும் தருவாயில் உள்ளது. எனவே இப்பணிகள் முடிவடைந்தவுடன் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதலமைச்சர் அவர்கள் மக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இன்னொரு மகத்தான கட்டமைப்பு, ஒரே நேரத்தில் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் 25 இடங்களில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான பணியாளர்களை தேர்வு செய்து, இன்னும் 3 மாத காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூ.1018 கோடி செலவில் 25 இடங்களில் கட்டப்பட்டு வரும் இம்மருத்துவமனைகளும் விரைவில் திறந்து வைக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

The post தமிழ்நாட்டில் 25 இடங்களில் கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: