வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கும் அபராதம் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் 2 ஆண்டு சிறைதண்டனை

*கலெக்டர் எச்சரிக்கை

விருதுநகர் : சட்ட விதிகளை மீறி குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேல்டு விசன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் பள்ளி மாணவ, மாணவியர், அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.

கலெக்டர் கூறுகையில், ‘‘ஜூன் 12 சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. குழந்தை தொழிலாளர் முறையை முழுமையாக அகற்றி சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவித்து குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்ற குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அனைத்து அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகளில் விளம்பர பலகைகள் வைத்து, உறுதிமொழி எடுத்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவது, 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகர தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. சட்ட விதிகளை மீறினால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை மற்றும் வளரிளம் தொழிலாளர் சட்டப்படி 1.4.2023 முதல் 31.5.2025 வரை மாவட்டத்தில் 15 குழந்தை தொழிலாளர்கள் மற்றும் 95 வளரிளம் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணிபுரிவதை கண்டறிந்தால் பொதுமக்கள் சைல்டுலைன் 1098 மற்றும் https://pencil.gov.in/users/login என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்போர் பற்றிய விபரம் ரகசியம் காக்கப்படும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் ஆனந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் மீனாட்சி, வேல்டு விஷன் நிறுவன அலுவலர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

The post வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கும் அபராதம் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் 2 ஆண்டு சிறைதண்டனை appeared first on Dinakaran.

Related Stories: