ஒரு விமானமே கருப்புப் பெட்டியாய்க் கருகிக் கிடக்கையில் எந்தக் கருப்புப் பெட்டியை இனிமேல் தேடுவது? :கவிஞர் வைரமுத்து வேதனை

சென்னை : அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த நிலையில், கவிஞர் வைரமுத்து கவிதை பாணியில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவை பின்வருமாறு..

கருப்புப் பெட்டி தேடுவார்கள்
விமானம் விபத்தானால்

ஒரு விமானமே
கருப்புப் பெட்டியாய்க்
கருகிக் கிடக்கையில்
எந்தக் கருப்புப் பெட்டியை
இனிமேல் தேடுவது?

பறிகொடுத்தோர்
பெருமூச்சுகள்
கரும்புகையாய்…

தீப்பிடித்த கனவுகளின்
சாம்பல்களை
அள்ளி இறைக்கிறது
ஆமதாபாத் காற்று

அவரவர் அன்னைமாரும்
கண்டறிய முடியாதே
அடையாளம் தெரியாத
சடலங்களை

புஷ்பக விமானம்
சிறகு கட்டிய
பாடையாகியது எங்ஙனம்?

கடைசி நிமிடத்தின்
கதறல் கேட்டிருந்தால்
தேவதைகள் இறந்திருக்கும்;
மரணம் முதன்முதலாய்
அழுதிருக்கும்

எரிந்த விமானம்
ஃபீனிக்ஸ் பறவையாய்
மீண்டெழ முடியாது

நாம் மீண்டெழலாம்
தவறுகளிலிருந்து

The post ஒரு விமானமே கருப்புப் பெட்டியாய்க் கருகிக் கிடக்கையில் எந்தக் கருப்புப் பெட்டியை இனிமேல் தேடுவது? :கவிஞர் வைரமுத்து வேதனை appeared first on Dinakaran.

Related Stories: