ஆபத்தை உணர்ந்த விமானி : கடைசியாக ‘மேடே’ அழைப்பு

அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.39 மணிக்கு லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் 30 வினாடிகளில் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியது. விமானம் தொடர்பை இழக்கும் முன்பு விமான கேப்டன் சுமீத் சபர்வால் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு மேடே அழைப்பை விடுத்தார். மே டே அழைப்பு என்பது ஒரு விமானி ஒரு போதும் அழைக்க விரும்பாத அழைப்பாகும். விமானம் பேராபத்தை விமானம் சந்திக்க இருப்பதை குறிக்கும் அழைப்பாகும். கேப்டன் சுமீத் சபர்வாலின் மே டே அழைப்பை விமான கட்டுப்பாட்டு அறை பெற்ற சில விநாடிகளில் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. ஏனெனில் மேடே அழைப்பு வந்ததும் விமானபோக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கேப்டன் சுமீத் சபர்வாலை தொடர்பு கொண்ட போது, தொடர்பு கொள்ள முடியவில்லை. அதற்குள் விமானம் மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதிய தகவல் வெளியானது.

‘மேடே அழைப்பு’ என்றால் என்ன?
மேடே அழைப்பு என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு துயர சமிக்ஞையாகும். இது முதன்மையாக உயிருக்கு ஆபத்தான அவசரநிலையைக் குறிக்க விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் தகவல்தொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

* மேடே சொல் எங்கிருந்து வந்தது?
மேடே சொல் ‘மைடர்’ என்ற பிரெஞ்சு சொற்றொடரிலிருந்து வந்தது. அதாவது ‘எனக்கு உதவுங்கள்’ என்பது இந்த சொல்லின் அர்த்தம்.

* எப்போது பயன்படுத்தப்பட்டது?
மேடே சொல் முதன்முதலில் 1920 களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது உலகளவில் விமான போக்குவரத்தில் ஒரு நிலையான நெறிமுறையாக உள்ளது. இந்த அழைப்பு எப்போதும் தொடர்ச்சியாக மூன்று முறை, ‘மேடே, மேடே, மேடே’ என்று கூறப்படுகிறது. இது தெளிவாகப் புரிந்துகொள்ளப்படுவதை உறுதிசெய்ய பயன்படுத்தப்படுகிறது.

* மேடே அழைப்பை யார் வெளியிடுகிறார்கள்?
மேடே அழைப்பு கப்பலின் கட்டளை அதிகாரி, ஒரு விமானி அல்லது கப்பலின் கேப்டன் கடுமையான அவசரநிலையை எதிர்கொள்ளும்போது வழங்கப்படுகிறது. இதில் விமானம் அல்லது கப்பலில் இயந்திர செயலிழப்பு, தீப்பிடித்தல், கட்டுப்பாட்டை இழத்தல், பயணம் செய்யும் அனைவரின் பாதுகாப்பையும் அச்சுறுத்தும் எந்தவொரு சூழ்நிலையும் அடங்கும். விமானப் பயணத்தில், விமானி மேடே அழைப்பை வானொலி மூலம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்கிறார். அரிதான சந்தர்ப்பங்களில், அழைப்பாளர் தொடர்பை இழந்திருந்தால், அருகிலுள்ள மற்றொரு விமானம் அல்லது கப்பல் மூலமாகவும் மேடேயை அனுப்பலாம்.

* மேடே அழைப்பிற்குப் பிறகு என்ன நடக்கும்?
மேடே அறிவிக்கப்பட்டதும், அந்த அதிர்வெண்ணில் உள்ள அனைத்து ரேடியோ போக்குவரத்தும் அழிக்கப்படும். துயரத்தில் உள்ள நபர் அவர்களின் இருப்பிடம், அவசரநிலையின் தன்மை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறார். பின்னர் விமானப்போக்குவரத்து கட்டுப்பாடு மையம் அல்லது அவசர சேவைகள் மீட்பு ஒருங்கிணைப்புடன் மீட்பு பணியில் பொறுப்பேற்கின்றன.

* இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகள்
2020 ஆகஸ்ட் 7: கொரோனா பெருந்தொற்று காலத்தில் துபாயில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்த விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் மழை காரணமாக சறுக்கி 35 அடி பள்ளத்தில் விழுந்ததில் 21 பேர் பலி. 169 பேர் உயிர் தப்பினர்.
2010 மே 22,. துபாயில் இருந்து வந்த ஏர்இந்தியா 737 ரக விமானம் மங்களூரு விமான நிலையத்தில் தரைஇறங்கும்போது ஓடுபாதையை தாண்டி 790 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் இருந்த 158 பேர் பலியாகினர். 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
2000 ஜூலை 17: கொல்கத்தாவில் இருந்து பாட்னா வந்த அலையன்ஸ் ஏர் நிறுவன போயிங் 737 ரக விமானம் தரையிறங்க முயற்சிக்கும்போது குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் இருந்த 55 பேரும், தரையில் இருந்த 5 பேரும் பலியானார்கள்.
1996 நவம்பர் 12 : அரியானா மாநிலம் சார்கி தாத்ரி அருகே நடுவானில் சவூதி அரேபியன் ஏர்லைன்சின் போயிங் 747 விமானமும், கஜகஸ்தான் ஏர்லைன்சின் ஐஎல்-76 ரக விமானமும் மோதி வெடித்து சிதறின. இந்த விபத்தில் இருவிமானங்களிலும் இருந்த 349 பேர் பலியானதுதான் இந்தியாவில் இதுவரை அதிக உயிரிழப்பு ஏற்பட்ட விமான விபத்து ஆகும்.
1990 பிப்ரவரி 14: பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது இந்தியன் ஏர்லைன்சின் ஏ 320 ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 146 பயணிகளில் 92 பேர் பலியானார்கள்.
1988 அக்டோபர் 19 : மும்பையில் இருந்து சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் போயிங் 737 ரக விமானம் மோசமான வானிலைக்கிடையே அகமதாபாத் விமானநிலையத்தில் தரைஇறங்க முயற்சிக்கும்போது அருகில் சில்லோடா பகுதியில் உள்ள மின்கோபுரம் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இதில், 133 பேர் பலியாகினர். 2 பேர் உயிர் தப்பினர்.
1978 ஜனவரி 1 மும்பையில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர்இந்தியா போயிங் 747 ரக விமானம் மும்பை கடற்கரையையொட்டி விழுந்து நொறுங்கியது. 190 பயணிகள், 23 ஊழியர்கள் உட்பட 213 பேர் பலியாகினர்.

* விமானத்தில் பயணம் செய்த 246 பேரில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டவர்
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் ஏஐ 171ல் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒரு கனடா நாட்டவர், 7 போர்த்துகீசிய நாட்டவர்கள் இருந்தனர். இதை ஏர் இந்தியா உறுதிப்படுத்தியது. மேலும் விமான பயணிகள் குறித்த தகவல்களை வழங்க 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் அறிவித்த ஏர் இந்தியா, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் அளிப்பதாக தெரிவித்துள்ளது.

* கேப்டன் 8200 மணி நேரம் பறந்தவர் துணை கேப்டன் 1100 மணி நேரம்
அகமதாபாத் ஏர் இந்தியா விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வாலின் தலைமையில் முதல் அதிகாரி( துணை விமானி) கிளைவ் குந்தருடன் இணைந்து விமானத்தை இயக்கினார். கேப்டன் சுமீத் சபர்வால் 8200 மணிநேர அனுபவமுள்ளவர். துணை விமானிக்கு 1100 மணிநேர பறக்கும் அனுபவம் இருந்தது. விமானம் அகமதாபாத்தில் இருந்து பிற்பகல்1.39 மணிக்கு ஓடுபாதை 23 இல் இருந்து புறப்பட்டது.

* மீட்பு பணியில் 6 என்டிஆர்எப், 2 பிஎஸ்எப் குழு
அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஆறு குழுக்களும், எல்லைப் பாதுகாப்புப் படையின் இரண்டு குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடந்த இடத்திற்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் இரண்டு குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான நிலையத்திற்கு பயங்கரவாத எதிர்ப்புப் பாதுகாப்புப் பணியை வழங்கும் ஒன்றிய தொழில்துறை பாதுகாப்புப் படையினர், உள்ளூர் தீயணைப்பு வீரர்கள்,காவல்துறை அதிகாரிகள் முதலில் விபத்து நடந்த இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

* விமான விபத்து: புலனாய்வு பிரிவு விசாரணை
அகமதாபாத் விமான விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காக ஏஏஐபி இயக்குநர் ஜெனரல் மற்றும் ஏஜென்சியின் புலனாய்வு இயக்குநர் உள்ளிட்டோர் அகமதாபாத்திற்கு செல்வார்கள் என்று அதிகாரி தெரிவித்தார். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ், இந்திய வான்வெளியில் நடக்கும் விமான விபத்துக்கள் மற்றும் கடுமையான சம்பவங்களாக வகைப்படுத்துவது விமான விபத்து புலானாய்வு பிரிவின் பொறுப்பாகும். விபத்துக்கள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்வதுடன், பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கும்.

* 39,450 மணி நேரம் பறந்த விமானம்
நவீன அம்சங்களை கொண்டுள்ள போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமான தயாரிப்பு பணிகளை போயிங் நிறுவனம் கடந்த 2007ல் துவங்கியது. 2011ல் முதல் விமானம் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்தால் பயணிகளுடன் இயக்கப்பட்டது. நீண்ட தூரம் வழியில் எங்கும் நிற்காமல் செல்லக்கூடிய விமானம் என்பதால் இதற்கு மவுசு அதிகம். இதுவரை 1189 ட்ரீம்லைனர்களை போயிங் நிறுவனம் விற்றுள்ளது. தற்போது விபத்துக்குள்ளானது 11.5 ஆண்டுகள் பழமையான விமானம் ஆகும்.. கடந்த 2013ம் ஆண்டு டிசம்பரில் இந்த விமானத்தை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏர் இந்தியா 2014 ஜனவரியில் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இந்த விமானம் இதுவரை 7,400 முறை பயணம் செய்துள்ளது. 39,450 மணி நேரம் வானில் பறந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து டெல்லிக்கு நேற்று அதிகாலை 1.34 மணிக்குதான் இந்த விமானம் வந்துள்ளது. டெல்லியில் இருந்து காலையில் அகமதாபாத் வந்த விமானம் அடுத்ததாக லண்டன் புறப்பட்டபோதுதான் விபத்தில் சிக்கி உள்ளது. சாதாரணமாக 25-லிருந்து 30 ஆண்டுகள் வரை பயன்படுத்தக் கூடிய இந்த விமானம், 11 ஆண்டுகளில் விபத்திற்குள்ளாகி உள்ளது.

* கேரள நர்சும் பலி
அகமதாபாத் விமான விபத்தில் கேரளாவைச் சேர்ந்த நர்சும் பலியாகி உள்ளார். பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே உள்ள புல்லாடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா ஆர். நாயர்(39) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஓமன் நாட்டிலுள்ள மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் வேலை கிடைத்தது. இதைத் தொடர்ந்து ஓமனில் இருந்து திரும்பிய இவர், லண்டனில் வேலைக்கு சேருவதற்காக நேற்று முன்தினம் கொச்சியிலிருந்து விமானம் மூலம் அகமதாபாத்துக்கு சென்றார்.அங்கிருந்து லண்டன் செல்லும்போது விபத்தில் சிக்கி பலியானார்.

* பறவை மோதியதால் விபத்தா?
விமான விபத்துக்கான காரணங்கள் குறித்து ஏற்கனவே விசாரணை தொடங்கிவிட்டது. விமான போக்குவரத்துத் துறை நிபுணர்கள் ஒருபுறம், போயிங் நிறுவன நிபுணர்கள் மற்றொருபுறம் என விபத்துக்கான காரணங்களை கண்டறிய நிபுணர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதனிடையே, விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டியும் கிடைத்துள்ளதால், அதை ஆராய்ந்த பிறகு, விபத்துக்கான முக்கிய காரணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், விமான விபத்திற்கு, பறவைகள் மோதியதே காரணமாக இருந்திருக்கலாம் என, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விமானத்தின் 2 எஞ்சின்களிலும் பறவை மோதி இருக்கலாம் என்றும், அதனால் மேலே எழும்புவதற்கான கூடுதல் சக்தியை எஞ்சினால் வழங்க முடியாமல் போயிருக்கலாம் என்றும் அதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 5 மருத்துவ மாணவர்கள் பலி
அகமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியில் ஏர் இந்தியா விமானம் மோதியதில் ஐந்து மருத்துவ மாணவர்கள் இறந்தனர். 40க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் காயமடைந்தனர். பலியானவர்களில் நான்கு இளங்கலை மாணவர்கள் மற்றும் ஒரு முதுகலை பட்டதாரியும் அடங்குவர். விமானம் விழுந்தபோது மருத்துவ மாணவர் விடுதி உணவகத்தில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். விமானம் விழுந்ததும் பலர் அதில் சிக்கிக்கொண்டனர். பலர் தப்பி ஓடினர். இதனால் உணவுடன், சாப்பாடு தட்டுகள் அப்படியே இருந்தன.

* கணவனை பார்க்க புறப்பட்ட புதுப்பெண்ணும் பலி
ராஜஸ்தானின் பலோதரா மாவட்டத்தில் உள்ள அரபா கிராமத்தைச் சேர்ந்த புது மணப்பெண் குஷ்பூ ராஜ்புரோகித். அந்த கிராமத்தை சேர்ந்த மதன்சிங் ராஜ்புரோகித்தின் மகள். இந்த ஆண்டு ஜனவரி மாதம் மன்பூல் சிங்கைத் திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் மன்பூல் சிங், லண்டனில் ஒரு மாணவர். திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக லண்டன் சென்று அவரைச் சந்திக்கவிருந்தார் புதுப்பெண் குஷ்பூ. ஆனால் துரதிருஷ்டவசமாக விமான விபத்தில் பலியாகி விட்டார்.

* ராஜஸ்தானை சேர்ந்த 11 பேர் பலி
அகமதாபாத் விமான விபத்தில் ராஜஸ்தானுக்கு உயிரிழப்பு அதிகமாக உள்ளது. விமானத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 11 பேர் பயணம் செய்தனர். அவர்களில் இங்கிலாந்தில் சமையல்காரர்களாக வேலைக்குச் சென்ற இரண்டு ஆண்களும், பளிங்கு வியாபாரியின் மகனும், மகளும், புதுப்பெண் குஷ்பூவும் அடங்குவர்.

* ஏதோ சரியில்லை வீடியோ வெளியிட்ட பயணி
விபத்துக்குள்ளான போயிங் ட்ரீம்லைனர் விமானத்தில் டெல்லியில் இருந்து அகமதாபாத் வந்த ஆகாஷ் வஸ்தா என்ற பயணி விமானத்தில் நிறைய வசதிகள் வேலை செய்யவில்லை என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில்,’ அதே விமானத்தில்தான் நான் டெல்லியில் இருந்து அகமதாபாத் வரை பயணித்தேன். 2 மணி நேரத்துக்கு முன்பாகத்தான் அகமதாபாத் வந்து சேர்ந்தேன். இந்த விமானத்தில் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகளை கவனித்தேன். இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்துக்குத் தெரிவிக்க வீடியோ ஒன்றையும் உருவாக்கினேன். விமானத்துக்குள் ஏசி சரியாக வேலை செய்யவில்லை. அதேபோல, விமானத்தில் டிவி திரை உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்கள் முறையாக வேலை செய்யவில்லை, கேபின் குழுவை அழைக்கும் பொத்தான், விளக்கு பொத்தான்களும் வேலை செய்யவில்லை’ என்று குறிப்பிட்டு அது தொடர்பான படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

* விமானத்தை தவறவிட்டதால் உயிர்தப்பிய பெண்
விபத்தில் சிக்கிய விமானத்தை பூமி சவுகான் என்ற பெண் 10 நிமிடங்கள் தவறவிட்டார். போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் அவரால் உரிய நேரத்தில் விமான நிலையம் செல்ல முடியவில்லை. விபத்து பற்றி கேள்விப்பட்டதும் அவர் கூறுகையில்,’ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுமுறைக்காக இந்தியா வந்தேன். எனது கணவர் லண்டனில் வசிக்கிறார். அந்த பத்து நிமிடங்களால், என்னால் விமானத்தில் ஏற முடியவில்லை. இதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. உயிர்கள் இழப்பு பற்றி கேள்விப்பட்ட பிறகு நான் முற்றிலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என் உடல் உண்மையில் நடுங்குகிறது. என்னால் பேச முடியவில்லை. நடந்த அனைத்தையும் கேட்ட பிறகு என் மனம் இப்போது முற்றிலும் வெறுமையாக உள்ளது’ என்றார்.

* அனைத்து உதவிகளையும் வழங்க தயார்: ஏர் இந்தியா தலைவர் அறிவிப்பு
அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் அவசரகால மீட்புக் குழுக்களுக்கு உதவ விமான நிறுவனங்கள் அனைத்தையும் செய்து வருவதாகவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் ஏர் இந்தியா வழங்கும் என்றும் ஏர் இந்தியா தலைவரும், டாடா குழுமத்தலைவருமான என்.சந்திரசேகரன் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ஆழ்ந்த துக்கத்துடன், அகமதாபாத் லண்டன் கேட்விக் இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் ஏஐ 171 ஒரு துயர விபத்தில் சிக்கியது என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். இந்த பேரழிவு நிகழ்வால் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் எங்கள் எண்ணங்களும் ஆழ்ந்த இரங்கல்களும் உள்ளன. இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் அவர்களது குடும்பத்தினரையும் ஆதரிப்பதே எங்கள் முதன்மையான கவனம். சம்பவ இடத்தில் அவசரகால மீட்புக் குழுக்களுக்கு உதவவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் பராமரிப்பையும் வழங்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* குட்பை இந்தியா வீடியோ வெளியிட்டு பலியான 2 இங்கிலாந்து நாட்டினர்
அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்துக்கு விமானம் ஏறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ஜேமி மீக் மற்றும் பியோங்கல் கிரீன்லா-மீக் ஆகியோர் குட்பை இந்தியா என்று வீடியோ வௌியிட்டனர். மேலும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அமைதியாகத் திரும்பிச் செல்கிறோம் என்று குறிப்பிட்டனர். ஆனால் விமான விபத்தில் அவர்கள் பலியாகி விட்டனர்.

* எப்படி நடந்தது? போயிங் நிறுவனம் அதிர்ச்சி
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து போயிங் விமான நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் போயிங் நிறுவனத்தின் பங்குகள் வரலாறு காணாத அளவு சரிந்துள்ளன. இதுபற்றி போயிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ ஆரம்ப அறிக்கைகள் குறித்து எங்களுக்குத் தெரியும். எப்படி இந்த விபத்து நடந்தது என்பது குறித்து மேலும் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

* விமான பணிப்பெண் குடும்பத்தினர் கதறல்
அகமதாபாத் விமானத்தில் பணிப்பெண்ணாக நங்தோய் சர்மா கோங்பிரைலட்பமின் என்பவரும் சென்றார். விமானம் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும், அவரது குடும்ப உறுப்பினர்கள் கதறும் வீடியோ வைரலாகி உள்ளது. அவரது தாயார்,’ என் குழந்தை, என் குழந்தை, நான் உன்னைப் பார்க்க விரும்புகிறேன். நீ எங்கே இருக்கிறாய். எனக்கு பைத்தியம் பிடித்துவிடும்’ என்று கூறுகிறார். இது மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

* விமானம் விழுந்ததும் என்ன நடந்தது? நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி தகவல்
அகமதாபாத்தின் மேகனிநகர் பகுதியில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர் விடுதி மீது விமானம் மோதியதால் ஏற்பட்ட விபத்து குறித்து நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டனர். இந்த விபத்தில் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பலர் காயமடைந்தனர். விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்து மாணவர் விடுதி மீது மோதியது. அந்த விடுதி 5 மாடி கட்டிடம் கொண்டது. விமானத்துடன் சேர்ந்து அந்த கட்டிடமும் தீப்பற்றி எரிந்தது. இதனால் மாணவர் விடுதியில் இருந்த பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் விடுதியை சுற்றி நிறுத்தப்பட்டு இருந்த பைக், கார்கள் தீப்பற்றி வெடித்து சிதறியதாக நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டனர்.

The post ஆபத்தை உணர்ந்த விமானி : கடைசியாக ‘மேடே’ அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: