லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் வரும் 20ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித்சர்மா ஓய்வு அறிவித்ததால் சுப்மன்கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லியும் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், மாஜி பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி அளித்துள்ள பேட்டியில், ”நீங்கள் ஓய்வு பெறும்போதுதான், நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதை மக்கள் உணருவார்கள். விராட் கோஹ்லி டெஸ்ட்டில் இருந்து போய்விட்டது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
அவர் ஓய்வு அறிவித்த விதத்தில், அதை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். எனக்கு இதில் ஏதாவது தொடர்பு(தேர்வுகுழு தலைவர்) இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்விக்கு பிறகு உடனடியாக கோஹ்லியை கேப்டனாக நியமித்திருப்பேன். டெஸ்ட் அணியின் கேப்டனாக கோஹ்லியை பிசிசிஐ நியமித்திருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவ்வாறு நியமித்திருந்தால்ஓய்வு பெறாமல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரு பகுதியாக இருந்திருப்பார், என்றார்.
The post இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கோஹ்லியை நியமித்திருந்தால் ஓய்வு அறிவித்திருக்க மாட்டார்: ரவிசாஸ்திரி சொல்கிறார் appeared first on Dinakaran.