தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 49 பேர் பலி..!!

தென்னாப்பிரிக்கா: தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளில் வார இறுதி முதல் கடும் மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது, இதனால் போக்குவரத்து மற்றும் மின்சார நெட்வொர்க்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. பலத்த காற்று காரணமாக கிட்டத்தட்ட 500,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் மின் இணைப்புகளை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தாதா நகரில் பாலத்தைக் கடக்கும்போது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்த நான்கு குழந்தைகள், ஒரு ஓட்டுநர் மற்றும் ஒரு நடத்துனரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஆற்றங்கரையில் யாரும் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட வாகனத்தில் இருந்த மேலும் நான்கு குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கான மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் மரங்களில் தொங்கி கொண்டிருந்த மூன்று குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

பேருந்தில் 13 பேர் இருந்தனர், அவர்களில் 11 பேர் பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இத்தகைய துயர சம்பவங்களால் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் இடம் பெயர்ந்து , பலர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு கேப்பில் உள்ள டாம்போ, அமதோல் மற்றும் ஆல்ஃபிரட் ந்சோ ஆகிய மூன்று மாவட்டங்களில் 58 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும், அண்டை நாடான குவாசுலு-நடாலில், ஒன்பது மாவட்டங்களில் 68 பள்ளிகள் சேதமடைந்துள்ளதாகவும் , உயிரிழப்புகள் எதுவும் எர்வடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்து, “குளிர்கால வானிலையின் மோசமான தாக்கங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வருவதால் எச்சரிக்கை, கவனிப்பு மற்றும் ஒத்துழைப்பைக் காட்ட வேண்டும்” என்று குடிமக்களை வலியுறுத்தினார்.
மோசமான வானிலை காரணமாக மேலும் உயிரிழப்புகளைத் தவிர்க்க இரண்டு மாகாணங்களிலும் சில முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.

The post தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 49 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: