சென்னை: ஆர்.கே.பேட்டை அருகே வீட்டின் பின்புறம் மது குடிப்பதை கண்டித்த காங்கிரஸ் பிரமுகர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). காங்கிரஸ் பிரமுகர். நெசவு தொழிலாளியான இவருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு அனைவரும் துங்கிய நிலையில், வீட்டில் மின்மோட்டார் மூலம் நெசவு பணியில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன், நள்ளிரவு 12.30 மணியளவில் சிறுநீர் கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றுள்ளார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர், அவரை கல்லால் சரமாரியாக அடித்துக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடிள்ளார். நேற்று அதிகாலை ராஜேந்திரனின் மனைவி, வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது, ராஜேந்திரன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுந்துள்ளார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்ததும், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாசபெருமாள், திருத்தணி டிஎஸ்பி கந்தன் மற்றும் மோப்ப நாய், தடவியல் நிபுணர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தனர். இதையடுத்து, ஆர்.கே.பேட்டை எஸ்ஐ ராக்கிகுமாரி மற்றும் போலீசார் சந்தேகத்தின்பேரில் கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனின் பக்கத்து தெருவில் வசிக்கும் ஹரிகிருஷ்ணன் (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஹரிகிருஷ்ணன் நள்ளிரவில் ராஜேந்திரன் வீட்டின் பின்புறம் அமர்ந்து, மது குடித்து உள்ளார். இதை பார்த்ததும் ராஜேந்திரன், மது குடிக்கக்கூடாது கெட்ட பழக்கம் என அறிவுரை கூறி உள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன் அங்கிருந்த பெரிய கல்லால், ராஜேந்திரன் தலை மற்றும் உடம்பு பகுதியில் பலமாக தாக்கி உள்ளார். இதில், படுகாயமடைந்த ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ஹரிகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post திருவள்ளூர் அருகே பரபரப்பு; மது குடிப்பதை கண்டித்ததால் காங்கிரஸ் பிரமுகர் படுகொலை: வாலிபர் கைது appeared first on Dinakaran.