* பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது
* மற்றொரு மாணவனுக்கு போலீஸ் வலை
சென்னை: காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் பிளஸ்1 மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 மாணவர்கள் உள்பட 3 பேரை காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான மற்றொரு மாணவரையும் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், களக்காட்டூர் ஊராட்சியில் வசிக்கும் ஒரு தம்பதியினருக்கு 3 மகள், ஒரு மகன் உள்ளனர். இதில், ஒரு மகள் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே செயல்படும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு படித்துள்ளார். விடுமுறை நாட்களில் தனியார் மகளிர் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்த அவர், தற்போது 11ம் வகுப்பு சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, களக்காட்டூர் ஊராட்சியை சேர்ந்த ஒரு தம்பதியரின் மகன், காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகம் பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
மேலும், 2 மாணவர்கள், களக்காட்டூர் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6ம்தேதி களக்காட்டூர் பகுதியை சேர்ந்த அஜய் (22) என்ற வாலிபர், இந்த 3 மாணவர்களுடன் சேர்ந்து, மாணவிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, களக்காட்டூர் பகுதியின் யூனியன் வங்கிக்கு பின்புறத்தில் அமைந்துள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, மறைவான பகுதியில் அரை மயக்கத்தில் இருந்த மாணவியிடம் பாலியல் வன்கொடுமை ஈடுபட்ட 3 மாணவர்கள் உள்பட 4 பேரும் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். பின்னர், வீட்டிற்கு வந்த மாணவி சோர்வாக இருந்துள்ளார். பின்னர், ஒவ்வாமை காரணமாக கடந்த 8ம்தேதி மாணவி வாந்தி எடுத்ததால், சந்தேகமடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்ததில் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில், பள்ளி மாணவர்கள் 2 பேர் மற்றும் அஜய் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 2 பள்ளி மாணவர்கள் சிறுவர்கள் என்பதால், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர். மேலும், தலைமறைவான மற்றொரு மாணவன் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த, சம்பவத்தில் குற்றத்தில் ஈடுபட்ட 3 பேர் பள்ளி மாணவர்கள் என்பதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை விட வயதில் குறைந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The post காஞ்சிபுரம் அருகே அதிர்ச்சி சம்பவம்: பிளஸ் 1 மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் appeared first on Dinakaran.