வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் ஆய்வு

ராசிபுரம், ஜூன் 12: ராசிபுரம் ஒன்றியம், மோளப்பாளையம் ஊராட்சியில், மாவட்ட கலெக்டர் உமா, நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ், வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். ராசிபுரம் ஒன்றியம், மோளப்பாளையம் ஊராட்சியில் உள்ள குடியிருப்பு வாசிகள், நகர்ப்புற வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த நபர்களின் குடியிருப்புகளுக்கு, மாவட்ட கலெக்டர் உமா நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் குடியிருப்புவாசிகளிடம், நீண்ட வருடங்களாக வசிப்பதற்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, மற்றும் வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்து ஆய்வு மேற்கொண்டார். ஆவணங்கள் சரியாக இருப்பின், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வீட்டுமனை வரன் முறைபடுத்தி, விரைவில் பட்டா வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து, ராசிபுரம் ஒன்றியம், மோளப்பாளையம் ஊராட்சியில், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மழை நீர் தேங்கும் வகையில் உள்ள தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் போன்றவை இருப்பின், அவற்றில் மழை நீர் தேங்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் எனவும், குளிர்சாதன பெட்டியின் பின்புறம் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். பின்னர், அணைக்கட்டி பாளையத்தில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

The post வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: