* இன்று மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்
சேலம்: சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 கி.மீ ரோடு ஷோ நடத்தினர். அப்போது வழிநெடுக்கிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று மேட்டூரை அணையை திறந்து வைக்கவும் முதல்வர், ரூ.1,650 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கி வைத்து, ஒரு லட்சம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மற்றும் சேலம் இரும்பாலை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.1,650 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கவிழா, முடிவுற்ற பணிகள் செயல்படுத்துதல் மற்றும் ஒரு லட்சம் பேர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (12ம்தேதி) நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் நேற்று காலை கோவை வந்தார்.
அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு பெருந்துறை வழியாக பவானி வந்தார். அங்கு முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திடீரென சாலைகள் இறங்கி நடந்து சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களை நேரில் சந்தித்து உற்சாகமாக உரையாடினார். பொதுமக்கள் அளித்த புத்தகங்கள், பவானி ஜமக்காளம், சால்வைகள், கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அந்தியூர் பிரிவு மற்றும் புதிய பேருந்து நிலையத்திலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். குருப்பநாயக்கன்பாளையத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் திமுகவினரின் வரவேற்பை முதல்வர் ஏற்றுக் கொண்டார். சாலையோரங்களில் நீண்ட தொலைவுக்கு திரண்டிருந்த மக்களை பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்தபடி முதல்வர் சென்றார்.
சேலம்-ஈரோடு மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்திற்கு முதல்வர் வந்தபோது, அவருக்கு சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்பி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நவப்பட்டியில் உள்ள திருமலை திருமண மஹாலில் நடந்த சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தொடர்ந்து நவப்பட்டியில் இருந்து மேட்டூர் வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்த ரோடு ஷோவில் முதல்வர் உற்சாகமாக பங்கேற்றார். நவப்பட்டியில் இருந்து புதூர், செக்கானூர், காவேரி கிராஸ், நாட்டாமங்கலம், மாதையன்குட்டை வழியாக மேட்டூர் சென்ற முதல்வருக்கு சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் முதல்வருக்கு வணக்கம் தெரிவித்தனர். மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி வந்த முதல்வரை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
* 5 கி.மீ நடந்து சென்ற முதல்வர்
பெரும்பள்ளத்தில் இருந்து நவப்பட்டி வரை 5 கிலோ மீட்டர் தூரம் மக்களுடன் மக்களாக நடந்தே சென்று முதல்வர் அனைவரிடமும் நலம் விசாரித்தார். இதைக்கண்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதையடுத்து முதல்வரின் அறிவுரைப்படி ஆம்புலன்ஸ் தொடர்ந்து செல்ல கட்சியினரும், போலீசாரும் வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.
* ‘அமோக வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆகணும்’
ரோடு ஷோவை மக்களை சந்தித்து முதல்வர் உரையாடினார். அரசு திட்டங்கள் குறித்து கேட்டறிந்து கோரிக்கை மனுக்களையும் கனிவோடு பெற்றுக் கொண்டார். இதனால் நெகிழ்ந்த மக்கள், திட்டங்கள் மிகவும் பயனளிக்கிறது. நலமோடு செயல்பட்டு வரும் நீங்கள் சட்டமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.
* பள்ளிக்கு சுற்றுச்சுவர் கேட்ட மாணவி தட்டிக் கொடுத்து முதல்வர் உறுதி
மேட்டூரை அடுத்த புதுச்சாம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யாழ்மொழி, மாணவன் அனிருத்தன் ஆகியோர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மேட்டூரில் நடைபெற்ற ரோடு ஷோவில் சந்தித்து தங்கள் பள்ளிக்கு சுற்றுச்சுவர் வேண்டி மனு கொடுத்தனர். எந்த பள்ளி..? என்ன வேண்டும்..? நன்றாக சொல்லித் தருகிறார்களா..? என்று கனிவுடன் கேட்ட முதல்வர், நன்றாக படிக்க வேண்டும் என கன்னத்தில் தட்டிக் கொடுத்தார். கண்டிப்பாக சுற்றுச்சுவர் சார்ந்த கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார்.
* மழையிலும் கலையாத கூட்டம்
பவானியில் இருந்து சேலம் வரை சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்வரை வரவேற்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். முதல்வர் வரும் வழியில் பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழையும் பெய்தது. ஆனால் பொதுமக்கள் அதை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று முதல்வரை உற்சாகமாக வரவேற்று கண்டுகளித்தனர். இதை இளைஞர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வைரலாக்கினர்.
The post சேலத்தில் 11 கி.மீ முதல்வர் ரோடுஷோ: ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.