கல்விக்காக தர வேண்டிய ரூ.2,291 கோடியை விடுவிக்க கோரிய மனு அவசரமாக விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில், பிஎம்  பள்ளி எனப்படும் மாதிரி பள்ளிகளை உருவாக்குவது தொடர்பாக மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இது இந்தியை திணிப்பதாகக் கூறி, அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மறுத்து வருகிறது. இதற்கிடையே, சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய, ரூ.2,152 கோடியை நிலுவையில் வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியது. ஆனால் பி.எம்  திட்டத்தில் இணைந்தால் மட்டுமே, இந்த கல்வி நிதி விடுவிக்கப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த தகவலானது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கேரளா, மேற்குவங்க மாநிலங்களுக்கும், சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் நிதியை விடுவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ரூ.2291 கோடி(6%) வட்டி உள்பட கல்வி நிதியை தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஒரு முறையீட்டை நேற்று வைத்தார். அதில், ‘‘ மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியையும் உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், கோடை விடுமுறை கால அமர்வில் இதுகுறித்து பரிசீலிக்க வாய்ப்பில்லை. இருப்பினும் உங்களது கோரிக்கை கருத்தில் கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.

 

The post கல்விக்காக தர வேண்டிய ரூ.2,291 கோடியை விடுவிக்க கோரிய மனு அவசரமாக விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு appeared first on Dinakaran.

Related Stories: