பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் திமுக அரசை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது: எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

சென்னை: தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் காவலாளியால் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இனி அரசு சேவை இல்லங்களில் பெண் காவலாளிகளை நியமிக்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். திராவிட மாடல் ஆட்சியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் பெண்களுக்கு அரணாக இருப்பதால் தான் இந்த மாதிரி குற்ற சம்பவங்களை எதிர்த்து தைரியமாக புகார் அளிக்க பெண்கள் முன்வருகின்றனர்.

கடந்தகால அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட பெண்களே தாக்குதல்களுக்குள்ளாகிய மோசமான சூழல் நிலவியதை தமிழ்நாட்டு பெண்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலை எல்லாம் மாற்றி பெண்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி பெண்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்பதோடு பெண்கள் பாதுகாப்பிலும் துளியும் சமரசமற்று செயலாற்றி வருகிறது திராவிட மாடல் அரசு. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான தண்டனையை மிகக் கடுமையாக்கியதோடு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, விரைவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனடியாக தண்டனையும் பெற்றுக்கொடுத்து வருகிறது திராவிடமாடல் அரசு. அரசின் இச்செயலையும் காவல்துறையின் செயல்பாட்டையும் உயர்நீதிமன்றமே பாராட்டியும் உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை அதிமுக அரசு எப்படி கையாண்டது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அதிமுகவை சேர்ந்த குற்றவாளிகளை காப்பாற்ற புகார் அளித்த பெண்ணின் குடும்பத்தையே அதிமுக குண்டர்களை விட்டு தாக்கிய கொடுமையும் அரங்கேறியது. அப்படி அதிமுக அரசை நடத்திய பழனிசாமிக்கு, தற்போது குற்றங்களை தடுப்பதோடு மட்டுமல்லாமல் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பெண்களுக்கு ஆதரவாக இருந்துவரும் திராவிட மாடல் அரசைப்பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது. வீண் அவதூறுகளை பரப்பி காப்பாற்றத் துடிக்கிறார். ‘டெல்லி அடிமை’ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் பழனிசாமி.

The post பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் திமுக அரசை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது: எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: