தான் எழுதிய பாடல் பல்லவிகள் தன்னைக் கேட்காமல் திரைப்படத் தலைப்புகளாக வைக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ஆதங்கம்

சென்னை: தான் எழுதிய பாடல் பல்லவிகள் தன்னைக் கேட்காமல் திரைப்படத் தலைப்புகளாக வைக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது.

அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை.

ஒன்றா இரண்டா…

பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன்,
மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன்.

இப்படி இன்னும் பல…

சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை.

செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன்.

ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது.

ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?” என எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

The post தான் எழுதிய பாடல் பல்லவிகள் தன்னைக் கேட்காமல் திரைப்படத் தலைப்புகளாக வைக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ஆதங்கம் appeared first on Dinakaran.

Related Stories: