திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவனந்தபுரம், ஜூன் 9: திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் கேரளா, தமிழ்நாட்டை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாப சாமி கோயில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது.108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோயிலுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் வருவார்கள். கோயிலின் புனரமைப்பு பணிகள் கடந்த 2017ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின்படி தொடங்கப்பட்டன. கொரானாவால் இந்த பணிகள் முடங்கியது. பின்னர் 2021ம் ஆண்டு முதல் மீண்டும் பணிகள் தொடங்கியது.

இந்த நிலையில் 270 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரத்தில் மூன்று புதிய கலசங்கள், சன்னதியின் முன்புள்ள ஒற்றைக்கல் மண்டபத்தின் மேல் கோபுரத்தில் இருக்கும் கலசம் என 4 கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதிய விஷ்வக்சேனன் சிலை பிரதிஷ்டை, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் சன்னிதியில் அஷ்டபந்த கலசம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மாநில ஆளுநர் விஷ்வநாத் ராஜேந்திர அர்லேக்கர், தற்போதைய திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் தலைவர் மூலம் திருநாள் ராம வர்மா உள்ளிட்ட பிரமுகர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண திரண்டு இருந்தனர்.

 

The post திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: