வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி வைபவ் நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 22 வயது மாணவன், தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி இரவு விடுதியில் 5 பேர் கொண்ட கும்பல், அத்துமீறி நுழைந்து மாணவனை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால், தாக்க முயன்றதாக தெரிகிறது. பின்னர் மாணவனை அச்சுறுத்தி ரூ.74 ஆயிரம், வாட்ச், இயர்பட்ஸ் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து மாணவன் நேற்று முன்தினம் கொடுத்த புகாரின்பேரில், காட்பாடி போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் மூலம் மாணவனை மிரட்டி பணம் பறித்த காட்பாடியை சேர்ந்த ரோகித்(20), பிரவீன்(22), விக்னேஷ்(22), அரி(27) மற்றும் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த அபினாஷ்(25) ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் ரோகித் என்பவர் பாஜ பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் கே.ஜி.குட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
The post காட்பாடியில் விடுதிக்குள் புகுந்து மிரட்டி மாணவனிடம் பணம் பறிப்பு பாஜ நிர்வாகி மகன் கைது appeared first on Dinakaran.