திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 7: திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆம்னி பேருந்து மோதி நெல் அறுவடை இயந்திரம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் திருமணி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (31), இவருடைய உதவியாளர் ஆரணி வட்டம் அகரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தீனா (15) ஆகிய இருவரும் நெல் அறுவடை இயந்திரத்தை ஓட்டிக்கொண்டு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அரசூர் பாரதி நகர் பகுதியில் வரும்போது பின்னால் வந்த ஆம்னி பேருந்து நெல் அறுவடை இயந்திரத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சங்கர், தீனா இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து விபத்தில் கவிழ்ந்த நெல் அறுவடை இயந்திரத்தை கிரேன் மூலம் தூக்கி அப்புறப்படுத்தினர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருவெண்ணெய்நல்லூர் அருகே நெல் அறுவடை இயந்திரம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.