மானாமதுரை : மானாமதுரை சிப்காட் பகுதியையும், சிவகங்கை பைபாஸ் சாலையையும் இணைக்கும் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை சிப்காட் அருகே உள்ள துணைமின்நிலையத்தில் அருகில் இருந்து சிவகங்கைக்கு செல்லும் பைபாஸ்ரோட்டை இணைக்கும் வகையில் இணைப்புச்சாலை உள்ளது.
இந்த சாலை மூலம் சிவகங்கை, மதுரை பகுதிகளில் இருந்து நகருக்குள் வருவோர் சிப்காட், மானாமதுரை டவுனுக்கு எளிதாக செல்ல முடியும்.
அதே போல மதுரை சிவகங்கை செல்வோருக்கு இந்த இணைப்புச்சாலை வசதியாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால் இந்த சாலை வழியாக செல்வோர் குண்டும் குழியுமாக சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் பெரியசாமிராஜா கூறுகையில், ‘‘இந்த சாலை கங்கையம்மன் நகர், கலைக்கூத்து நகர், மாரியம்மன்நகர், நேதாஜிநகர் உள்ளிட்ட பல்வேறு நகர்களில் வசிப்பவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.
மேலும் கொன்னக்குளம், மணக்குளம், குலையனூர், தம்பிக்கிழான் சிங்ககுருந்தங்குளம், நவத்தாவு, சன்னதிபுதுக்குளம் செல்வோரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய ஊர்களுக்கு இணைப்பு சாலையாக உள்ள இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்.
The post மானாமதுரை சிப்காட்- சிவகங்கை பைபாஸ் ரோடு இணைப்புச்சாலை தார்ச்சாலையாகுமா? appeared first on Dinakaran.