மியான்மர், ஈரான், ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை


வாஷிங்டன்: 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக கடந்தாண்டு ஜனவரி 20ம் தேதி 2ம் முறையாக பதவி ஏற்ற டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற அடிப்படையில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். மேலும் அரசு செலவினங்களை குறைக்கும் வகையில் ஊழியர்கள் பணி நீக்கம் உள்ளிட்ட உத்தரவுகளையும் செயல்படுத்தி வருகிறார். அதன்ஒரு பகுதியாக ஏற்கனவே தன் முதல் பதவிக்காலத்தில் கடைப்பிடித்த பயண தடை கொள்கையையும் மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

அதன்படி தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணமாக முன்வைத்து 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவுப்படி, மியான்மர், எக்குவோடோரியல் கினியா, எரித்திரியா, ஆப்கானிஸ்தான், ஈரான், சாட், காங்கோ குடியரசு, ஹைத்தி, லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கியூபா, லாவோஸ், புருன்டி, சியாரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலாவில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கையெழுத்திட்ட டிரம்ப், “அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பு, தேச பாதுகாப்புக்காக நான் செயல்படுகிறேன். அதற்காக 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை மற்றும் 7 நாடுகளை சேர்ந்தவர்கள் வர கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன். ” என தெரிவித்துள்ளார்.

The post மியான்மர், ஈரான், ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை appeared first on Dinakaran.

Related Stories: