வார நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அதிகபட்சம் 2 மணி நேரமும், வார இறுதி நாட்களில் 4 மணி நேரம் முதல் 5 மணி நேரமும், பவுர்ணமி நாட்களில் அதிகபட்சம் சுமார் 6 மணி நேரமும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதோடு, வரிசையில் காத்திருக்கும் போது ஏற்படும் வாக்குவாதம், கைகலப்பு சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. எனவே, தரிசன வரிசையை முறைப்படுத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தினமும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் இடைநிறுத்த தரிசனம் (பிரேக் தரிசனம்) அனுமதிக்கவும், அதற்காக, ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கவும் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும், ஆனி பிரமோற்வசம் 10 நாட்கள், ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள், தீபத்திருவிழா 17 நாட்கள், உத்ராயண புண்ணியகால உற்சவம் 13 நாட்கள், பங்குனி உத்திரம் 5 நாட்கள் ஆகிய நாட்களிலும், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியில் 2 நாட்கள் வீதம் மொத்தம் 24 நாட்கள் மற்றும் பிரதோஷம் நடைபெறும் 24 நாட்கள் உள்பட ஆண்டுக்கு மொத்தம் 103 நாட்கள் மட்டும் பிரேக் தரிசனம் இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பொதுமக்கள் வரும் 30ம் தேதி வரை எழுத்து மூலம் கருத்து தெரிவிக்க கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. எனவே, பொதுமக்களின் கருத்து அடிப்படையில், பிரேக் தரிசனம் அமல்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும்.
The post பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அண்ணாமலையார் கோயிலில் ₹500 கட்டணத்தில் பிரேக் தரிசனம்: தினமும் மாலை ஒரு மணி நேரம் அனுமதிக்க முடிவு; மக்களிடம் கருத்துக்கேட்பு appeared first on Dinakaran.