கடந்த 11 ஆண்டுகளில் ஒவ்வொருவருக்கும் அதிகாரம் அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு, முத்ரா யோஜனா உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் கரிப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் 81 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வீதம் 11 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. மேலும், 15 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் மூலம் 4 கோடிக்கு அதிகமான வீடுகளும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 12 கோடி கழிவறைகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் இதுவரை 68 லட்சம் சாலையோர வியாபாரிகள் கடன் பெற்றுள்ளதாகவும், முத்ரா திட்டத்தால் 52.50 கோடிக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு கடன்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் கோடிக்கணக்கான குடும்பங்கள் முதன்முறையாக சில வகையான அடிப்படை வசதிகளை பெற்றுள்ளன. பிரதமரின் காப்பீடு திட்டமான சுரக்ஷா பீமா யோஜனா மூலம் 51 கோடி பேரும், ஜீவா ஜோதி பீமா திட்டத்தின் மூலம் 23.64 கோடி பேரும் பலன் அடைந்துள்ளனர்.
மேலும், 77 கோடிக்குள் அதிகமானவர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10.33 கோடி பேருக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் ஒன்றிய அரசால் ரூ.13,000 கோடி செலவில் செயல்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் கைவினை கலைஞர்களுக்கு ரூ.3 லட்சம் வரை பிணை இல்லாத கடன் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரதமரின் ஷ்ரம் யோகி மான்தன் திட்டத்தின் மூலம் அமைப்புசாரா துறைகளில் உள்ள ஊழியர்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 51.31 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3000 கிடைப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தின் தொழிலாளர்களின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தொழிலாளர் வைப்பு நிதியில் இருந்து 2 கோடியே 56 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.54,200 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.
The post ஏழைகள் மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்தி அடிமட்ட அளவில் புரட்சி ஏற்பட்டுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்!! appeared first on Dinakaran.