ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகள் நடந்து வந்த நிலையில், கடந்த 27ம் தேதி பிகாம் பட்டப்படிப்புக்கான ‘தொழிற்சாலை சட்டம்’ (இன்டஸ்டிரியல் லா) என்ற பாடத்தின் வினாத்தாள் கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அன்று நடக்கவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு கடந்த 30ம் தேதி நடந்தது.
வினாத்தாள் கசிந்தது தொடர்பாக பல்கலை பதிவாளர் சாக்ரடீஸ், பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில், ‘கடந்த 26ம் தேதி இரவு 10 மணிக்கு பல்கலைக்கழக தேர்வாணையர் வாட்ஸ்அப் எண்ணுக்கு 27ம் தேதி நடக்க இருந்த தொழிற்சாலை சட்டம் பாடத்திற்கான வினாத்தாள் அனுப்பப்பட்டதாகவும், இதன் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் கசிந்ததற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில், புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 316, 318, 3(5) தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வுகள் சட்டம் 3, 4 மற்றும் 5 (தேர்வு முறைகேடு) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்க பரிந்துரைப்பதாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தகவல் தெரிவித்துள்ளார்.
The post தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த வழக்கு: சிபிசிஐடியிடம் ஒப்படைக்க முடிவு appeared first on Dinakaran.