நம்பி யாரும் கூட்டணிக்கு வர்ற மாதிரி தெரியல.. எடப்பாடியை ஒருமையில் பேசி கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா: கொந்தளிக்கும் அதிமுகவினர்

சென்னை: எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரத் தயாராக இல்லை என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்திடம் ஒருமையில் பேசி கிண்டல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தற்போது கட்சிப்பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ள அவர், வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார்.

இந்நிலையில், தொகுதிவாரியாக 10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3 மாணவர்களை அழைத்து பரிசு வழங்கும் விழா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று முன்தினம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.  முன்னதாக, சம்பந்தப்பட்ட தனியார் விடுதியில் தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது, இருவரும் உரையாடியபடியே நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசி கிண்டல் செய்கிறார். எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரத் தயாரா இல்லை என்கிறார். பாஜவே அதிமுகவை கூட்டணியில் இருந்து விலக்கிவிடும் என்றும், எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணி வைக்க முன்வரவில்லை.

அண்ணாமலையாவது 10 பேரை கூட வச்சிக்கிட்டு, தேர்தல்ல நின்னு 18 சதவீத ஓட்டு வாங்கினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை நம்பி எவனும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை என்று கூறுகிறார் ஆதவ் அர்ஜூனா. இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பாஜ, அதிமுக கூட்டணி சமீபத்தில் உறுதியான நிலையில், இந்த கூட்டணியில், தவெகவை இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் குறித்து அதிமுகவினர் விமர்சிக்க எடப்பாடி பழனிசாமி தடை விதித்த நிலையில், ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ வைரலாகி வருவது அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அதிமுக கூட்டணியில் துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் சொன்னார்: சீமான் பேட்டி
சட்டமன்ற தேர்தலை முன்வைத்து தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க விரும்பியதாகவும், இதற்கான பேச்சுவார்த்தையில் ஆதவ் அர்ஜூனா ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையின்போது தமிழக வெற்றி கழகம் சார்பில் 90 இடம் கேட்டு, அதை அதிமுக மறுத்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு உலா வருகிறது. இதனால் தொடர்ந்து எடப்பாடியை ஆதவ் அர்ஜூனா விமர்சிப்பதற்காகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்த ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘‘புறணி பேசுவதற்கெல்லாம் நாங்கள் கருத்து சொல்ல முடியுமா? இதே ஆதவ் அர்ஜுனா தான், அதிமுக கூட்டணிக்கு வந்தால் என்னை துணை முதல்வர் ஆக்குகிறேன்’’ என்று கூறினார், அதற்கு என்ன செய்வது’’ என சிரித்தபடி ஒரே போடாக போட்டுள்ளார்.

 

The post நம்பி யாரும் கூட்டணிக்கு வர்ற மாதிரி தெரியல.. எடப்பாடியை ஒருமையில் பேசி கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா: கொந்தளிக்கும் அதிமுகவினர் appeared first on Dinakaran.

Related Stories: