பர்வத மலையேற புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டது பக்தர்களின் பாதுகாப்பு கருதி

கலசபாக்கம், மே 16: பக்தர்களின் பாதுகாப்பு கருதி பர்வத மலையேற புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. தென் கைலாயம் என அழைக்கப்படும் நந்தி வடிவமான 4560 அடி உயரமுள்ள பர்வதமலையில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்கின்றனர். பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை அம்மன் மல்லிகா அர்ஜுனேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் மற்றும் விசேஷ தினங்களில் திரளான பக்தர்கள் வருகை தந்து மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மலையேறி செல்வதற்கான படிக்கட்டுகள் கரடு முரடான பாதைகள், ஏணி படி, ஆகாய படி, பாறைகள் ஆகியவற்றை கடந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை மருத்துவ வசதி கிடையாது.

மலை ஏறிச் செல்லும் போது சில நேரங்களில் முதியவர்கள் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள், உடல்நல குறைவால் மலையேறி செல்பவர்கள் எதிர்பாராத விதமாக மலை உச்சிக்கு செல்லும்போது மூச்சு திணறல் காரணமாக எதிர்பாராத விதமாக பலியாகின்றனர். தற்போது பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலை ஏற சில புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன்படி பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்து சமய அறநிலையத்துறை மூலம் மலையேற கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பு பலகைகள் பச்சையம்மன் கோயில் மலை அடிவாரம் வீரபத்திரன் கோயில் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு பலகையில் தெரிவித்திருப்பதாவது: சுமார் 4560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது அமைந்துள்ள மல்லிகா அர்ஜுனேஸ்வரர் சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மலை மீது ஏற அனுமதி இல்லை. மேலும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல்நல குறைபாடுகள் உள்ளவர்கள் இம்மலை பயணத்தினை தவிர்க்கவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

The post பர்வத மலையேற புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டது பக்தர்களின் பாதுகாப்பு கருதி appeared first on Dinakaran.

Related Stories: