பாரதிதாசன் பிறந்த நாள் ‘தமிழ்வார விழா’ கொண்டாட்டம் 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமை: தலா ரூ.10 லட்சம் காசோலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப்படும் ‘தமிழ் வார விழா’ நிறைவு விழாவில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமை தொகையாக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார். தமிழ்மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 22ம் தேதி சட்டமன்ற பேரவையில், விதி எண்.110ன் கீழ், ‘பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலைநிகழ்ச்சிகள் கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.

அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, கலை பண்பாட்டுத்துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து விழாவை 29.4.2025 முதல் 5.5.2025 வரை தமிழ்நாடு முழுவதும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, கலைப்போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. அந்த வகையில், தமிழ் வார விழாவின் நிறைவு நாளான நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த நிறைவு விழாவில், தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ.பழநி ஆகியோரின் நூல்களை நாட்டுடைமை செய்து அவர்களின் மரபுரிமையினருக்கும், கொ.மா.கோதண்டம் மற்றும் புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களுக்கும் நூலுரிமை தொகையாக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

மேலும், கலை பண்பாட்டு துறையின் இசைக் கல்லூரிகள் மற்றும் கவின்கலை கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் பெருமையை போற்றும் இசை, நடனம் மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கி வாழ்த்தினார். விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் எம்.கே.மோகன், இ.பரந்தாமன், தாயகம் கவி, த.வேலு, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ்குமார், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், தலைமை செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன், கலை பண்பாட்டு துறை இயக்குநர் கவிதா ராமு, தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அருள், ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் சவுமியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பாரதிதாசன் பிறந்த நாள் ‘தமிழ்வார விழா’ கொண்டாட்டம் 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமை: தலா ரூ.10 லட்சம் காசோலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: