நாம் திருப்பாவையில் மூன்றாவது பாசுரத்தை பார்க்கிறோம். திருப்பாவை முழுவதும் சேவிக்க முடியவில்லை என்றாலும்கூட, இந்த ஒரு பாசுரத்தையாவது சேவிக்க வேண்டும் என்று சொல்வது வழக்கம். ஏனெனில், மொத்த திருப்பாவையின் சாரமும் இந்த ஒரு பாட்டிற்குள் இருப்பதாக ஒரு ஐதீகமுண்டு. திவ்ய தேசங்களில் பிரசாதங்கள் கொடுக்கும்போது வேதத்திலிருந்து ஸ்வஸ்தி வசனம் சொல்வார்கள். ஆசீர்வாத மந்திரங்கள் சொல்வார்கள். எப்படி வேதத்திலிருந்து ஸ்வஸ்தி வசனமும், ஆசிர்வாத மந்திரங்கள் சொல்கிறோமோ , அதேபோல கைங்கரியம் செய்து கொண்டிருக்கும் அர்ச்சகர்கள் பிரசாதம் கொடுக்கும்போது தமிழ் வேதமான திவ்ய பிரபந்தத்திலிருந்து சில ஸ்வஸ்தி வசனங்கள், ஆசி வசனங்களெல்லாம் சொல்வார்கள். அதில் ஆசி வசனம் போன்று இருக்கக் கூடிய முக்கியமானதே இந்த பாசுரமாகும். இன்றைக்கும் இந்த பாசுரத்தைச் சொல்லித்தான் பக்தர்களுக்கு பிரசாதம் சாதிப்பதென்பது வழக்கமாகும். இந்தப் பாடலைச் சொல்லி, அதிலும் முக்கியமாக நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்! என்பதைச் சொல்வதும் வழக்கமாகும்.
அதேபோல நம்மாழ்வாரின் ஒரு பாடலும் உண்டு. நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே! என்கிற பாசுரத்தையும் இந்த திருப்பாவையிலுள்ள மூன்றாவது பாசுரத்தையும் சேர்த்தே கோயில்களில் பிரசாதம் சாதிக்கும் வழக்கம் உண்டு. அதிலிருந்தே இந்த பாசுரத்தின் முக்கியத்துவம் நமக்குத் தெரிகிறது. அதற்கு அடுத்ததாக சில நிலைகளில் வைத்துப் பார்க்க வேண்டும். முதல் நிலையில் அந்தப் பாசுரத்தின் வெளிப்படையான அர்த்தம். அடுத்த நிலையில் அந்தப் பாசுரத்தின் உள்ளர்த்தம். மூன்றாவதாக அந்தப் பாசுரத்தின் முக்கியத்துவம் என்ன? இருதய ஸ்தானம் எது? என்று ஒவ்வொரு பாசுரத்தையும் இப்படி மூன்று நிலையில்தான் பார்க்கிறோம். அதேமாதிரிதான் இந்தப் பாசுரத்தையும் முதல் நிலையில் வைத்துப் பார்ப்பதற்கு முன்பு, இதற்கு முந்தைய பாசுரங்களில் சொல்லப்படும் சில கருத்துகளையும் நினைவு கூறுதல் மிகவும் அவசியமாகும். திருப்பாவை என்று சொன்னாலே அது பாவையின் நோன்பை குறிக்கக் கூடியது. ஸ்ரீ மத் பாகவதத்தில் சொல்லக் கூடிய காத்யாயணி விரதத்தை குறிக்கக்கூடிய என்று பார்த்தோம். அந்தப் பாவை நோன்பு புரிவதன் மூலம்தான் ஆண்டாள் திருப்பாவையையே பாடியிருக்கிறாள் என்றும் பார்த்தோம்.
அப்போது நமக்கு இந்த திருப்பாவையை பாடிக் கொடுத்திருப்பதே கிட்டத்தட்ட, கோபிகைகளின் காலத்தில் நிகழ்ந்த காத்யாயணி விரதம். ஆண்டாள் காலத்தில் நடந்த பாவை நோன்பு. அதையெல்லாம் நாம் இந்தக் காலத்தில் செய்கிறோமோ செய்யவில்லையோ, திருப்பாவை ஓதினாலே நமக்கு அந்த நோன்பை செய்த பலன்கள் நமக்கு வந்து சேரும். அதற்கேற்றாற்போல் ஒரு நோன்பு அல்லது ஒரு விரதம் என்று எடுத்துக் கொண்டால், முதலில் ஒரு சங்கல்பம் செய்து கொள்வோம் என்று பார்த்தோம். அந்த சங்கல்பத்தில் தேச காலங்களைச் சொல்வோம் என்று பார்த்தோம். அதற்குப் பிறகு ஒரு விரதத்தில் எதெல்லாம் செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று பார்த்தோம். மார்கழித் திங்கள் என்கிற பாசுரத்தில் தேச காலங்களைச் சொல்லி, யாரை முன்னிட்டுக் கொண்டு செய்கிறோம் என்று நாராயணனைச் சொல்லி, வையத்து வாழ்வீர்காள் என்கிற இரண்டாவது பாசுரத்தில் எதையெல்லாம் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக் கூடாது என்று சொன்னாள். இப்போது இந்த மூன்றாவது பாசுரமும் அந்த சங்கல்பத்தினுடைய தொடர்ச்சியாக வருகிறது என்றே எடுத்துக் கொள்ளலாம். எப்படி எடுத்துக் கொள்ளலாம்? பொதுவாக சங்கல்பத்தில் தேசகாலங்களை சொல்வோம்.
அதற்குப்பிறகு எதையெல்லாம் செய்ய வேண்டும், வேண்டாம் என்று சொல்வோம். மூன்றாவது கட்டத்தில் என்ன சொல்வோமெனில், பூஜையால் உண்டாகக் கூடிய பலன்கள் என்ன என்றும் சொல்வோம். ஒரு சங்கபத்தில் இதை நிச்சயம் சொல்வோம். சமஸ்த மங்களவாப்யர்த்தம் … சமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம்… தர்மார்த்த காம மோட்ச சதுர்வித புருஷார்த்த சித்தியர்த்தம்… ஞான வைராக்கிய மோட்ச பிராப்யர்த்தம்… பகவத் அனுக்கிரக சித்தியர்த்தம் … என்று சங்கல்ப மந்திரத்தில் நாம் சொல்லக் கூடிய வாக்கியங்கள். இவையாவுமே அந்த விரதத்தை, பூஜையை செய்வதால் ஏற்படக்கூடிய பலன்கள். இந்தப் பாசுரமும் தாயார் நமக்கு செய்து வைக்கக்கூடிய சங்கல்பத்தின் நிறைவுப் பகுதியாக எடுத்துக் கொள்ளலாம். முதல் பாசுரத்தில் நாராயணனே நமக்கே பறை தருவான் என்று சொன்னாள். அப்படிச் சொன்ன வாக்கியமானது பகவானுடைய பரம் என்கிற நிலையை காண்பிக்கிறது. பரமபதத்தில் இருக்கக் கூடிய வைகுண்டநாதனுடைய ஜீவாத்மாக்களுக்கு மோடம் கொடுக்கக் கூடிய நிலையினை முதல் பாசுரம் காண்பித்துக் கொடுக்கிறது. இரண்டாவது பாசுரத்தில் , பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி என்று சொன்னாள். இதில் பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் என்பது வியூக மூர்த்தி.
பாற்கடலில் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.
வாசுதேவ, சங்கர்ஷணர், பிரத்யும்ன, அநிருத்தர் என்று நான்கு ரூபங்களில் தன்னை வியூக மூர்த்திகளாக தன்னை வகுத்துக் கொண்டு, சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரமெல்லாம் செய்து இந்தப் பிரபஞ்சத்தை வைகுண்டத்தில் இருக்கக் கூடிய பரவாசுதேவர், பாற்கடலுக்கு இறங்கி வந்து, இந்தப் பிரபஞ்சத்தை நிர்வகிக்கிறார். அது வியூக நிலை. அந்த வியூக நிலையை காண்பித்துக் கொடுத்தது, இரண்டாவது பாசுரம். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயப்படி பகவானுடைய முதல்நிலை பரம் என்று சொல்லக் கூடிய, பரமபத நாதருடைய நிலை. அதற்கு அடுத்து வியூக நிலையான வாசுதேவ சங்கர்ஷண, பிரத்யும்ன, அநிருத்தர் என்று சொல்லக் கூடிய நிலையாகும். இப்போது இந்த இரண்டையும் முதல் இரண்டு பாடல்களில் காண்பித்துக் கொடுத்த பிராட்டி, மூன்றாவது பாடலில் விபவம் என்கிற நிலையை காண்பித்துக் கொடுக்கிறாள். விபவம் என்றால் அவதாரம். அந்த அவதாரத்தையே இங்கு அழகாக மூன்றாவது பாசுரத்தில் காண்பித்துக் கொடுக்கிறாள்.
(தொடரும்)
ஸ்ரீ தத்தாத்ரேய சுவாமிகள்
The post திருப்பாவை எனும் தேனமுதம் – மூன்றாவது பாசுரம் appeared first on Dinakaran.