வெயில் தாக்கத்தை பொறுத்து பள்ளி திறப்பு தள்ளிப்போகும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

திருச்சி: வெயில் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும். தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தையொட்டி திருச்சி சுப்பிரமணியபுரம் கலைஞர் சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த மே தின நினைவு சின்னத்துக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டி: கோடை விடுமுறை முடிந்து ஜூன் 8ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளோம். அப்போதைய வெயிலின் தாக்கம் எப்படி இருக்கிறதோ அதன்படி முதல்வர் அலுவலகம் என்ன சொல்கிறதோ அதன்படி பள்ளிகள் திறக்கப்படும்.

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது. அதற்காக கட்டண நிர்ணய ஆணையமே வைத்துள்ளோம். முன்னாள் நீதியரசர் தலைமையிலான கமிட்டியின் கட்டண நிர்ணயத்தை மீறி அதிகளவில் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய கல்வி கொள்கை என்பது மொழி சார்ந்தது இல்லாமல் பல்வேறு சரத்துக்கள் உள்ளது. பள்ளிகளில் இடைநிறுத்தம் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. இடைநிறுத்தல் அதிகப்படுத்தும் வேலையை தான் ஒன்றிய அரசு சொல்கிறது. புதிய கல்வி கொள்கையால் குழந்தைகள் இடைநிறுத்தம் அதிகமாக இருக்கும். நாம் இருமொழி கொள்கையில் நம்மை நிரூபணம் செய்துள்ளோம். மும்மொழி கொள்கை என்பது பெயிலியர் சிஸ்டம். அதை ஏற்க முடியாது. 6,000 ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். தீர்ப்பு வந்தவுடன் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post வெயில் தாக்கத்தை பொறுத்து பள்ளி திறப்பு தள்ளிப்போகும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: