சென்னை காவல்துறை புலன் விசாரணைக்காக போலீசார் நீதிமன்ற சாட்சியம் அளிக்க வீடியோ கான்பிரன்ஸ் அரங்கம்: எழும்பூர் இணை கமிஷனர் அலுவலகத்தில் திறப்பு

சென்னை: சென்னை காவல்துறை புலன் விசாரணைக்கு என தனியாக காவல் அதிகாரிகள் நீதிமன்ற சாட்சியம் அளிக்கும் வகையில் எழும்பூரில் உள்ள இணை கமிஷனர் அலுவலகத்தில் வீடியோ கான்பிரன்ஸ் அரங்கம் நேற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறைக்கு என இணையவழி நீதிமன்ற விசாரணைகளுக்காக சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி நவீன வசதிகளுடன் கூடிய வீடியோ கான்பிரன்ஸ் அரங்கம் எழும்பூரில் உள்ள கிழக்கு மண்டல இணை கமிஷனர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல்துறையை சேர்ந்த வழக்கு விசாரணை அதிகாரிகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவசியமின்றி மாநிலம் முழுவதும் உள்ள நீதித்துறை நடவடிக்கைகளில் சாட்சியங்கள் வழங்கிட மெய்நிகர் சாட்சி அறை உதவிடும் வகையிலும், உரிய நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தாமதமின்றியும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் நிலையை உறுதிப்படுத்தவும் இந்த வசதி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவிக்கரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்ட நடைமுறை விதிகளின்படி பிஎன்எஸ்எஸ் 254(1)(3)ன் படி நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆடியோ வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலமாக அரசு பொது அதிகாரிகள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலிருந்து சாட்சியம் அளிக்க உரிய அனுமதி வழங்கி உள்ளது. இந்த வீடியோ கான்பிரன்ஸ் வசதி ஏற்பாடுகள் காவல்துறை- நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கும் ஒரு முன்னோடி டிஜிட்டல் மற்றம் நவீனமய வழிகாட்டுதல் ஆகும். இந்த நடவடிக்கைகள் நீதிமன்ற வழக்கு விசாரணை துரிதமாக தொடர்வதற்கும், காவல்துறையினர் நீதிமன்றத்தில் எவ்வித தாமதமுமின்றி நீதிமன்ற சாட்சியங்களை வழங்கி தேவையற்ற பயண அலைகழிப்புகள் நீக்கப்பட்டு, சீரிய நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையில் அமைந்துள்ளது. இந்த சிறப்பு மிக்க மெய்நிகர் சாட்சி அறை, வீடியோ கான்பரன்ஸ் அரங்கை தலைமையிட கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி நேற்று காவல்துறை பயனப்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

The post சென்னை காவல்துறை புலன் விசாரணைக்காக போலீசார் நீதிமன்ற சாட்சியம் அளிக்க வீடியோ கான்பிரன்ஸ் அரங்கம்: எழும்பூர் இணை கமிஷனர் அலுவலகத்தில் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: