பூந்தமல்லி-குன்றத்தூர்-பல்லாவரம் சாலை விரிவாக்கம் நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

சென்னை: பூந்தமல்லி – குன்றத்தூர் – பல்லாவரம் சாலையை அகலப்படுத்த 2014ம் ஆண்டு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, நிலஎடுப்புப் பணிகள் முடியாத நிலை இருந்ததால், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பூந்தமல்லி-குன்றத்தூர்-பல்லாவரம் சாலை ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி கோடம்பாக்கம்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் இணைகிறது.

இச்சாலை பல்லாவரம் பம்மல் பொழிச்சலூர் அனகாபுத்தூர் குன்றத்தூர் ஆகிய முக்கிய இடங்களையும் மற்றும் ஜிஎஸ்டி சாலை, சென்னை புறவழிச்சாலை, வெளிவட்டச்சாலை ஆகிய சாலைகளை இச்சாலை இணைப்பதினால், போக்குவரத்து செறிவு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அனகாபுத்தூர் புறவழிச்சாலையிலிருந்து பல்லாவரம் மார்ஸ் ஓட்டல் வரை, போக்குவரத்து நெரிசல் உள்ள நேரங்களில், வாகனங்கள் 4 கி.மீ. தூரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போதைய 2 வழிச்சாலையின் அகலம் சில இடங்களில் 9 மீட்டராகவும், சில இடங்களில் 10 மீட்டராகவும் உள்ளது.

இச்சாலையில் வாகனப் போக்குவரத்து செறிவு மிக அதிகமாக உள்ளது. சிஎம்டிஏ பெருந்திட்டத்தை கருத்தில் கொண்டு, 24மீ அகலம் தேவையென முடிவெடுத்து, நிலஎடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, பூந்தமல்லி – குன்றத்தூர் – பல்லாவரம் சாலையின் 7 கி.மீ.க்கு நிலம் கையகப்படுத்தும் பணியும், மேலும், 6 கிராமங்களில், ஈசா பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், திருநாகேஸ்வரம், மனஞ்சேரி மற்றும் குன்றத்தூர் பி பகுதி ஆகிய கிராமங்களில் நிலஎடுப்புப் பணி பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகின்றன.

நிலஎடுப்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், நிலஎடுப்புப் பணிகளில் உள்ள இடர்பாடுகளை கேட்டறிந்து, அவற்றை களைந்து விரைவுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் தலைமைப் பொறியாளர் சத்தியபிரகாஷ், சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர் செல்வக்குமார் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post பூந்தமல்லி-குன்றத்தூர்-பல்லாவரம் சாலை விரிவாக்கம் நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: