‘மோதலை பெரிதாக்க வேண்டாம்’ இந்தியா-பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்: வெளியுறவு அமைச்சர்களுடன் பேச முடிவு

நியூயார்க்: இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘மோதலை பெரிதாக்க வேண்டாம்’ என இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்நிலையில், வாஷிங்டனில் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க வெளியுறவுச் செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ், ‘‘காஷ்மீர் நிலவரம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் அணுகி மோதலை பெரிதாக்க வேண்டாம் என வலியுறுத்த உள்ளோம்.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்றோ, நாளையோ இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களை தொடர்பு கொண்டு இதுதொடர்பாக பேச உள்ளார். இந்த பிரச்னையில் மற்ற பிற நாடுகளின் தலைவர்களும், வெளியுறவு அமைச்சர்களும் தலையிடுமாறு கேட்டுக் கொண்டு வருகிறோம்’’ என்றார். சமீபத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அளித்த பேட்டியில், ‘‘கடந்த 30 ஆண்டாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காக தீவிரவாதத்தை ஆதரிக்கும் இழிவான வேலையை செய்து வந்தோம்’’ என கூறியிருந்தார்.

இது குறித்து டாமி புரூசிடம் கேட்டதற்கு, ‘‘இந்தியா, பாகிஸ்தான் அரசுகளுடன் தொடர்பில் இருக்கிறோம். வெளியுறவு மட்டத்தில் மட்டுமல்ல, பல அமைச்சகங்களுடன் ஆலோசிக்கிறோம். இந்த பிரச்னையில் பொறுப்பான தீர்வுக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட நாங்கள் ஊக்குவிக்கிறோம். உலகம் இதை கவனிக்கிறது. இதை தவிர கூடுதல் விவரம் என்னிடம் இல்லை’’ என நேரடியாக பதிலளிக்காமல் நழுவினார்.

The post ‘மோதலை பெரிதாக்க வேண்டாம்’ இந்தியா-பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்: வெளியுறவு அமைச்சர்களுடன் பேச முடிவு appeared first on Dinakaran.

Related Stories: