திண்டுக்கல்/பழநி: திண்டுக்கல் மாவட்ட மலைக்கிராமங்களில் காட்டு யானை, காட்டுமாடு, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாட்டத்தில் கொடைக்கானல், பழநி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொடைக்கானல், ஆத்தூர், பழநி அடர்ந்த வனப்பகுதிகள் ஆகும், இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, ராஜநாகம் கருப்பு வெள்ளை நிறத்தில் மந்திகள், மான்கள் உள்ளிட்டவை வசிக்கின்றன. குறிப்பாக மலைப்பகுதிகளில் தற்போது காட்டு யானை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. அவை விவசாய நிலங்களில் புகுந்து காய்கறிகளையும் அங்கு பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் காட்டு மாடு, யானை அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை தாக்கி விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் சில விவசாயிகள் மலை விவசாயம் செய்தாலும் அதனை கடைசி வரை விலங்குகளிடமிருந்து காப்பது சவாலாகவே உள்ளது. எனவே வனத்துறையினர் தலையிட்டு வனவிலங்குகளை விவசாய நிலங்களுக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், பெரும்பாலான கிராமங்களில் விவசாய நிலங்களில் தொல்லை தரும் யானைகளை அடர்ந்த வனங்களில் கொண்டு சென்று விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
* திண்டுக்கல் மாவட்டத்திலேயே 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பெரிய வனப்பரப்பைக் கொண்டது பழநி வனச்சரகம். இங்கு வரிப்புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், கேளையாடு, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் அதிகளவு உள்ளன. இவை அடிக்கடி உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதனைத் தடுக்க அகழி மற்றும் சோலார் மின்வேலி அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் வனத்துறையினரால் எடுக்கப்பட்டன. எனினும், விலங்குகள் விளைநிலங்களுக்குள் வருவது குறைவதில்லை. பழநி பகுதியில் யானைகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து வந்தன. தற்போது யானைகள் மட்டுமின்றி, மான், காட்டுப்பன்றி உள்ளிட்டவைகளும் வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சுற்றித்திரிந்த வன விலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.
பழநி வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, விளைநிலங்களுக்குள் விலங்குகள் வராத வகையில் வனப்பகுதிக்குள் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள், தடுப்பணைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வனப்பகுதியை ஒட்டி இருக்கும் தோட்டத்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாங்களாகவே விரட்ட முற்பட்டால் இருதரப்பிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் இதனை உணர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
காட்டு யானைகள் அதிகம்
தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் காட்டுயானை விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், அவ்வப்போது சாலைகளிலும் சுற்றித்திரிகிறது. இதேபோல், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகளிவ் தொல்லை அதிகரித்து வருகிறது. மலைப்பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுபோல், இப்பகுதிகளில் நெல்லி, மா, சப்போட்டா, தென்னை, வாழை விவசாயம் நடக்கிறது. இப்பகுதியில் அவ்வப்போது, காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அதுபோல், மலையடிவாரத்தை ஒட்டி உள்ள தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இதுமட்டுமின்றி, தண்ணீருக்கு பயன்படுத்தப்படும் பைப், மோட்டார் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக சேதப்படுத்தி செல்கின்றது.
தொட்டிகளில் நீர் நிரப்பப்படுமா?
வனப்பகுதியில் ஏராளமான அளவில் சிறுத்தை, யானை, மான், கேளையாடு, கரடி, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் வனப்பகுதிக்குள் நீர் இல்லாதபோது அடிக்கடி நீர் அருந்துவதற்காக வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விடுகின்றன. வெளியே வரும் வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு விளைவிக்கப்பட்டிருக்கும் பயிர் வகைகளை நாசம் செய்து விடுகின்றன. இதனை தடுக்கும் வகையில் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் வனத்துறையினரால் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் வெயில் சுட்டெரிக்கிறது. தண்ணீர் வற்றி வறண்டுபோய் காணப்படுகின்றன. இதனால் வனவிலங்குகள் வெளியே வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்ப வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
The post மலைக்கிராமங்களில் தொடர் அட்டகாசம்: ‘வாட்டர்’ தேடி வரிசையா வருது ‘வைல்ட் அனிமல்ஸ்’: வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.