பொதுமக்களின் நம்பிக்கையை சிபிஐ இழந்து வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து!!

மதுரை : பொதுமக்களின் நம்பிக்கையை சிபிஐ இழந்து வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் போலி நபர்களுக்கு கடன் வழங்கி ரூ.2 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வங்கியின் மேலாளர் உட்பட 13 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த மதுரை சி.பி.ஐ நீதிமன்றம், 8 பேருக்கு தண்டனை வழங்கியது. 5 பேரை விடுதலை செய்தது.தண்டனை பெற்றவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், விசாரணை நீதிமன்றம் , 8 பேருக்கு விதித்த தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில், “பொதுமக்களின் நம்பிக்கையை சிபிஐ இழந்து வருகிறது. பாரபட்சமான விசாரணை காரணமாக சிபிஐ மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. சிபிஐ அதிகாரிகள் மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. வானளாவிய அதிகாரங்கள் தமக்கு உள்ளன; யாரும் கேள்வி கேட்க முடியாது என்று சிபிஐ அதிகாரிகள் நினைக்கின்றனர். சில வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளை விடுவித்துவிட்டு சில நபர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்த வழக்கில் சி.பி.ஐ சரியாக விசாரிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனவே, விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இனி வரும் காலங்களில், சி.பி.ஐ தனது விசாரணையில் கவனமாக இருக்க வேண்டும். மக்கள் நம்பிக்கையை பெறும் வகையில் செயல்பட வேண்டும்,”இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post பொதுமக்களின் நம்பிக்கையை சிபிஐ இழந்து வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து!! appeared first on Dinakaran.

Related Stories: