போலீஸ் எஸ்பியை அடிக்க பாய்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா: ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம்

பெங்களூரு: விலைவாசி உயர்வை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக பெலகாவியில் காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்தில் முதல்வர் சித்தராமையா போலீஸ் எஸ்பியை அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, சமையல் காஸ் விலை உயர்வு உள்பட ஒன்றிய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கர்நாடக மாநில காங்கிரஸ் சார்பில் பெலகாவிவில் கண்டன போராட்டம் நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் உள்பட தலைவர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் சித்தராமையா பேசிக் கொண்டிருந்தபோது கருப்பு உடை அணிந்த பாஜ பெண் தொண்டர்கள் பாகிஸ்தான் மீது போர் அவசியமில்லை என்று கூறிய சித்தராமையாவை கண்டித்து கோஷம் எழுப்பியபடி, தலைவர்கள் இருந்த மேடையில் ஏற முயன்றனர். இதை பார்த்த முதல்வர் சிறிது நேரம் தனது உரையை நிறுத்தினார்.

பின்னர் மைக்கில், பெலகாவி எஸ்பி யார் என்று சத்தமாக கேட்டார். உடனே கூடுதல் எஸ்பி நாராயண பரமணி, அலறி அடித்துக் கொண்டு மேடைக்கு சென்றார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வரிடம் விளக்கம் அளிக்க முற்பட்டார். அப்போது கடும் கோபத்தில் இருந்த முதல்வர் சித்தராமையா கூடுதல் எஸ்.பி.யை அடிக்க கையை ஓங்கினார். இதனால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மேடையில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் பாஜவுக்கு எதிராகவும், முதல்வர் சித்தராமையா அரசுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் பாஜ பெண் தொண்டர்களை கைது செய்து அழைத்து சென்றனர். கடந்த 2013ம் ஆண்டு சித்தராமையா முதல்வராக இருந்த போது இதே போல் மாவட்ட எஸ்பியை மேடையில் கடிந்து கொண்டார். அப்போது உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், முதல்வருக்கு ஆதரவாக பேசியது குறிப்பிடத்தக்கது.

 

The post போலீஸ் எஸ்பியை அடிக்க பாய்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா: ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: