கும்பகோணம் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் தீ விபத்து

*சமூகவிரோதிகள் காரணமா? போலீசார் விசாரணை

கும்பகோணம் : கும்பகோணம் அருகே கீழக்கொருக்கை அரசு உயர்நிலைப்பள்ளி மர்ம நபர்கள் வைத்த தீயால் வகுப்பறை எரிந்து சேதமானது.கும்பகோணம் அருகே கீழக்கொருக்கை அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளி 1937ல் கட்டப்பட்ட பழமையான வகுப்பறைகள் கொண்டதாகும். இது வாய்க்கால் ஓரமாக இருப்பதால் மழைக்காலங்களில் பல்வேறு விஷ ஜந்துக்கள் நடமாடும் என்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்துடனே இருந்து வந்ததாக தெரிகிறது.

அதோடு பாதுகாப்பில்லாத பள்ளியின் வகுப்பறைக்கு பின்புறத்தை சிலர் மது அருந்தும் இடமாகவும் பயன்படுத்தி வருகிறார்கள். மது அருந்திவிட்டு அங்கேயே பாட்டில்களை போடுவதும் வாடிக்கையாக இருந்தது.

இந்நிலையில் பள்ளி கோடை விடுமுறை என்பதால் மாணவர்கள் நடமாட்டம் இல்லாத போது முழு நேரமும் பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்களில் பலர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென்று பள்ளி வகுப்பறை, தலைமையாசிரியர் அறை தீப்பற்றி எரிந்தது.

அப்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் வகுப்பறையில் இருந்த உள்ள பர்னிச்சர்கள், மாணவர்கள் அமரும் டெஸ்க், பெஞ்ச் மற்றும் ஆய்வக உபகரணங்கள், அங்குள்ள ஆவணங்கள் மாணவிகளுக்கான நாப்கின்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலானது.

சமூகவிரோதிகள் பள்ளி கட்டிடத்தின் சுற்றுப்புறத்தில் மது அருந்தி, புகைபிடிப்பதால் இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். மிகவும் பழமையான இந்த பள்ளிக்கு பாதுகாப்பான பள்ளி கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என பொதுமக்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கும்பகோணம் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: