2016-2017ம் ஆண்டு முதல் 2020-2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 455 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக உறுப்பினர் சுந்தர்ராஜன் கூறினார். ஆனால், எங்களின் இந்த நான்கு ஆண்டு காலத்தில் மட்டுமே 1 லட்சத்து 31 ஆயிரத்து 238 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில், 2016-2017ம் ஆண்டு முதல் 2020-2021 வரையிலான ஐந்து ஆண்டுகால வருவாய் 48 ஆயிரத்து 872 கோடி ரூபாய் ஆகும். ஆனால், எங்களின் இந்த நான்கு ஆண்டு காலங்களில் மட்டும் 72 ஆயிரத்து 4 கோடி ரூபாய். திமுக அரசு பொறுப்பேற்ற போது, 2020-2021ம் நிதியாண்டில் 10 ஆயிரத்து 643 கோடி ரூபாயாக இருந்த பதிவு துறையின் வருவாய் தற்போது இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்து, இந்த நிதியாண்டில் 21 ஆயிரத்து 968 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
பதிவுத் துறைக்கு சொந்தமான 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன கட்டடம் ஒன்று சென்னை ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ளது. இந்தக் கட்டடம் 1864 ஆம் ஆண்டு இந்தோ சராசனிக் கட்டட கலை நயத்துடன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கதாகும். வலுவிழந்த நிலையில் இருந்த இந்த புராதானக் கட்டடத்தை பழமை மாறாமல் ரூ.9.85 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு, கடந்த மார்ச் 10ம் தேதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை வடக்கு மாவட்டப் பதிவாளர் அலுவலகம், மாவட்டப் பதிவாளர் தணிக்கை அலுவலகம், வடசென்னை எண் 1 இணை பதிவாளர் அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. பதிவுக்கு வரும் மக்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் சேவைகள் அளிக்கும்வகையில் அடையாறு சார்பதிவாளர் அலுவலகம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான கட்டடங்கள் மற்றும் வாடகை கட்டடங்களில் செயல்பட்டுவரும் பதிவு அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டவும், தென் சென்னை பதிவு மாவட்டம் குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தை மூன்றாக பிரித்தும், கோவை வடக்கு பதிவு மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தை இரண்டாக பிரித்தும், தருமபுரி பதிவு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை பதிவு மாவட்டம், ஜமுனாமரத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி பதிவு மாவட்டம் வாணாபுரம் ஆகிய இடங்களில் புதிய அலுவலகங்களை உருவாக்கவும், மேலும், பதிவுத் துறைக்குத் தேவையான அடிப்படை உள்கட்டமைப்புகளை வழங்குவதற்கு இந்த நிதியாண்டில் பதிவுத் துறைக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மேலும், திண்டுக்கல் பதிவு மாவட்டம் கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து பாச்சலூர் கிராமத்தினைப் பிரித்து பழனி பதிவு மாவட்டம், சத்திரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* புதிய அறிவிப்புகளை வெளியிடாத அமைச்சர்
வணிகவரி மற்றும் பதிவுத்துறைக்கான பதிலுரை வழங்கிய அமைச்சர் மூர்த்தி, துறை அதிகார்கள், அலுவலர்களுக்கு நன்றி கூறி உரையை நிறைவு செய்தார். அப்போது உறுப்பினர்கள் அறிவிப்பு, அறிவிப்பு என கேட்டனர். அதற்கு அமைச்சர் ‘அறிவிப்பு எல்லாமே அந்த வணிக வரித் துறையில் 350 கோடி ரூபாயிலும், பதிவுத் துறையில் ரூ.100 கோடியிலும் உள்ளடக்கம் அது எதை எதையெல்லாம் கொடுத்திருக்கிறேனோ அதுதான் அறிவிப்பு‘ என கூறி உரையை நிறைவு செய்தார்.
The post 2020-21ல் ரூ.10,643 கோடி – 2024-25ல் ரூ.21,968 கோடி பதிவுத்துறை வருவாய் 2 மடங்கு அதிகரிப்பு: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.