* விரைவில் நிலம் கையகப்படுத்தப்படும்
* மெட்ரோ நிறுவனம் தகவல்
சென்னை: விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அறித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மின்சார ரயில் மூலமாக வண்டலூர் சென்று அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்கின்றனர். மேலும் மாநகர பேருந்துகள் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்றடைகின்றனர். இதனால் பயணிகளின் சிரமத்தை குறைக்க சென்னை விமான நிலையம் வரை உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தினந்தோறும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் கொண்டு வரப்பட்டால் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் ஒழிக்க முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து, கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1ல் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை மேம்பால சாலையுடன் இணைத்து நீடிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத் துறை செயலாளர் கோபாலிடம் மெட்ரோ நிர்வாகம் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க ரூ.9,335 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ வழித்தடத்தில் சென்னை விமான நிலையம், பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.
மேலும் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் வழியாகச் செல்லும், இது கிளாம்பாக்கம் பேருந்து முனையம், விமான நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு இணைப்பை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.46 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்கவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
டபுள் டக்கர் அமைப்பு
மெட்ரோ திட்டத்தின் சிறப்பு அம்சமாக, ஈரடுக்கு அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் நிலை மேம்பாலத்தில் வாகன போக்குவரத்திற்கும், 2ம் நிலை மேம்பாலத்தில் மெட்ரோ ரயில் பாதையும் அமைக்கப்பட உள்ளது. ஒரே தூண்களில் மேல் மட்டத்தில் மெட்ரோ ரயில் ஓட, கீழ்மட்டத்தில் மெதுவாக போக்குவரத்துக்கான சாலை அமைக்கப்படும். ஒரே கட்டிடத்தில் இரண்டு வகையான போக்குவரத்து வசதிகளை செயல்படுத்துகிறது. இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இந்த உயர்த்தப்பட்ட சாலை நேரடியாக கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும்.
The post விமான நிலையம் – கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கு தமிழக அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.