டாஸ்மாக்கிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்தது. இதையடுத்து, அமலாக்கத்துறையின் இந்த திடீர் சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு அரசு தனிதனியாக வழக்குகளை தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு 6 நாட்கள் விசாரித்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். அதில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 2017 முதல் 2024ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட 41 முதல் தகவல்கள் அறிக்கைகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளதே தவிர, வெறும் செவி வழி தகவல்களின் அடிப்படையில் அல்ல எனத் தெரிவித்துள்ளனர். சோதனை உத்தரவில், டாஸ்மாக் அதிகாரிகளிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்று கொள்ள முடியாது. ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டுகளை ஏற்று கொள்ள முடியாது.

டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை தடுக்க அரசு முயல்வது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளனர். டாஸ்மாக்கிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அதுகுறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையான சோதனையை எதிர்ப்பது குற்ற நீதி பரிபாலனத்தின் அஸ்திவாரத்தை பாதிக்கும் என கூறியுள்ளனர்.

The post டாஸ்மாக்கிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: