பெண்கள் இடையே அதிகரித்து வரும் நுரையீரல் புற்றுநோய்; புகை பிடிக்கும் இடத்தில் இருக்க வேண்டாம்: மருத்துவர்கள் தகவல்

சிறப்பு செய்தி
நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரலில் தொடங்கும் ஒரு வகை புற்றுநோயாகும். புகைபிடித்தல் மற்றும் புகையிலை பயன்பாடு இதற்கு முக்கிய காரணங்களாகும். மரபணு மாற்றங்கள் அல்லது ஏற்கனவே இருக்கும் நுரையீரல் நோய்கள் போன்ற பிற காரணிகளும் சில சமயங்களில் நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். உலகளவில் நுரையீரல் புற்றுநோய் இரண்டாவது அதிகம் பரவும் புற்றுநோயாக உள்ளது.

அத்துடன் புற்றுநோய் மரணங்களில் நுரையீரல் புற்றுநோய் முதலிடத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் 18 லட்சம் உயிரிழப்புகள் நுரையீரல் புற்றுநோயால் ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றது. இதில் 85 சதவீதம் புற்றுநோய் பாதிப்பிற்கு புகைப்பிடிப்பதே காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 10 பேரில் 7 பேருக்கு புகைபிடிப்பதால் இந்த நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.

மேலும் புகைபிடிப்பவர்களை தவிர காற்று மாசுபாடு, மரபணு மாற்றங்கள் மற்றும் சில நுரையீரல் தொடர்பான நோய்கள் ஆகியவை நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் பிற காரணிகளாகும். இதனை தவிர கட்டுமானம் & சுரங்கங்களில் வேலைகளில், கப்பல் கட்டும் வேலைகளில் இருக்கும் மக்களுக்கு கல்நார் மற்றும் சிலிக்கா காரணத்தினால் இந்த புற்றுநோய் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்துடன் வாழ்க்கை முறை காரணிகள் மற்றும் இணை நோய்கள் மறைமுகமாக நுரையீரல் புற்றுநோயை அதிகரிக்கும் அபாயத்திற்கு கொண்டுபோய்விடும். மோசமான உணவு, உடல் செயல்பாடு இல்லாமை, உடல் பருமன், மற்றும் நாள்பட்ட வீக்கம் புற்றுநோய் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்கக்கூடிய பிற உடல்நலப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், முன்பே இருக்கும் நுரையீரலின் நிலைமை அல்லது கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளின் வரலாறு இந்த பாதிப்பை அதிகரிக்கும். சில ஆண்டுகள் முன்னர் வரை ஆண்களிடயே அதிகரித்து வந்த இந்த புற்றுநோய் சமீப காலமாக பெண்களிடயே அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவேரி மருத்துவமனை நுரையீரல் நிபுணர் செல்வி கூறியதாவது:
நுரையீரல் புற்றுநோய்க்கு புகை பழக்கம் முக்கிய காரணமாக உள்ளது. இதனை தவிர நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதில் சுற்றுச்சூழல் காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. காற்று மாசுபாடு நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். வாகனம், தொழிற்சாலைகளில் இருந்து வரும் துகள்கள் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும். மரம் அல்லது எண்ணெயை எரிப்பதால் ஏற்படும் புகை, நார், டீசல் வெளியேற்றம், ஆர்சனிக், காட்மியம், குரோமியம் மற்றும் சிலிக்கா ஆகியவையும் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

ஆண்களை விட தற்போது பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். முக்கிய காரணம் பெண்களிடையே அதிகரிக்கும் புகைபிடிக்கும் பழக்கம். குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்த பழக்கம் பெண்களிடையே தொடங்கியது. இதனால்தான் இப்போது இளம் பெண்கள் நுரையீரல் புற்றுநோயால் அவதிக்குள்ளகின்றனர். அத்துடன் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத பெண்கள் இருந்தாலும் அவர்களும் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு காரணம் பொது இடங்களில் அவர்கள் புகை பிடிப்பவரின் அருகில் நிற்பது. அவர்களுடன் பழகுவது ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டுமின்றி காற்று மாசு, சமையல் புகை மற்றும் மரபணு மாற்றங்கள் போன்ற காரணங்களாலும் இது ஏற்படுகிறது. எனவே பொது இடங்களில் முககவசம் அணிவது முக்கியமாக கருதப்படுகிறது.

தற்போது ஏஐ பயன்பாடு அதிகரித்து வருகிறது. அது புற்றுநோய் கண்டறிதலில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நுரையீரல் புற்றுநோய்க்கு பல்வேறு விதமான ஸ்கேன் செய்வார்கள். அந்த ஸ்கேன் செய்யும் போது பாதிப்பு எங்கு உள்ளது, எந்த அளவு உள்ளது என்பதை தெளிவாக பார்க்க முடியும் அதுமட்டுமின்றி புகைப்பழக்கம் இருந்து புற்றுநோய் இல்லாதவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா என்பதையும் பரிசோதிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முழுவதும் உலகளாவிய அளவில் நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பது, புகைப்பழக்கத்தை நிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது, ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் உயிர் பிழைப்பு விகிதத்தை உயர்த்த முடியும் என்பதை எடுத்துரைப்பது, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட காரணத்தால் இது அனுசரிக்கப்படுகிறது.

நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்
நீண்ட நாட்கள் இருமல் அல்லது இருமல் மாறுபாடு, இருமும் போது ரத்தம் வருவது, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, எடை இழப்பு, பசியின்மை, தொடர்ந்து சோர்வு தோள்பட்டை வலி, விழுங்குவதில் சிரமம் உள்ளிட்டவை இருந்தால் பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

நுரையீரல் புற்றுநோய் தடுக்கும் வழிகள்
புகைப்பழக்கத்தை ((சிகரெட், பீடி, ஹூக்கா, ஈ-சிகரெட்) முழுவதும் நிறுத்த வேண்டும், பிறர் புகைக்கும் இடத்தில் இருக்க கூடாது, விறகு, சுள்ளி, மண்ணெண்ணை அடுப்பை தவிர்த்து சமையலறையில் சிம்னி அல்லது எக்ஸாஸ்ட் ஃபேன் கட்டாயம் பயன்படுத்த வேண்டும், தினமும் பழங்கள் & காய்கறிகள் சாப்பிட வேண்டும், வாரத்தில் குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும், 50 வயதுக்கு மேல் நீண்டகால புகைப்பழக்கம் இருந்தால் மருத்துவரிடம் சிடி ஸ்கேன் பற்றி கேட்டுப் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஈ-சிகரெட் பாதிப்பு
ஈ-சிகரெட் (e-cigarette) அல்லது வேப் (vaping) செய்வதால் நுரையீரல் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் இது பாரம்பரிய சிகரெட்டை விட குறைவான அபாயம் கொண்டது என்று தற்போதைய அறிவியல் ஆதாரங்கள் கூறுகின்றன.

Related Stories: