சில மாதங்களாக திடீரென்று காணாமல் போனது ஏன்?.. நடிகை நஸ்ரியா நசீம் பரபரப்பு அறிக்கை

சென்னை: தமிழில் ‘நேரம்’, ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர், நஸ்ரியா நசீம் (30). மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் அவர், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். 2014ல் மலையாள நடிகர் பஹத் பாசிலை காதல் திருமணம் செய்த அவர், திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகிறார். கடைசியாக மலையாளத்தில் ‘சூக்ஷமதர்ஷினி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பிறகு பொதுவெளியில் வராமல் இருந்தார். சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த அவர், பல மாதங்களாக இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள் எதுவும் வெளியிடவில்லை. இந்நிலையில், திடீரென்று காணாமல் போயிருந்ததற்கான காரணத்தை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து நஸ்ரியா நசீம் கூறியிருப்பதாவது: நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் ஏன் சில மாதங்களாக தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்தேன் என்பது குறித்து இப்போது பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களில் பலருக்கு தெரியும், நான் எப்போதும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வருவேன் என்ற விஷயம். எனினும், கடந்த சில மாதங்களாக எனது உடல்நிலை கோளாறு மற்றும் தனிப்பட்ட சவால்களால் கடுமையாக போராடி வருகிறேன். அவை எனக்கு அனைவருடனும் தொடர்பில் இருப்பதை கடினமாக்கி விட்டது என்பதே உண்மை. எனது 30வது பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு மட்டுமின்றி, நான் நடித்த ‘சூக்ஷமதர்ஷினி’ என்ற படத்தின் வெற்றி விழா உள்பட பல முக்கியமான தருணங்களை கொண்டாட கூட தவறவிட்டேன்.

நான் ஏன் தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்தேன் என்பதை விளக்காததற்கும், நீங்கள் விடுத்த அழைப்புகளை எடுக்காததற்கும் அல்லது அதற்கு பதில் அளிக்காததற்கும் அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ஏற்படுத்திய சிரமத்துக்கு உண்மையிலேயே வருந்துகிறேன். நான் முழுமையாக வெளியுலகை தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டேன். வேலைக்காக என்னை தொடர்புகொள்ள முயற்சித்த எனது சக ஊழியர்கள் அனைவருக்கும் எனது மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இல்லாததால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருந்துகிறேன். ஒரு நல்ல விஷயமாக, நேற்று முன்தினம் சிறந்த நடிகைக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் விருது பெற்றதை பகிர்ந்துகொள்வதில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து அங்கீகாரத்துக்கும் மிகுந்த நன்றி.

நான் முழுவதுமாக குணமாக இன்னும் சில காலமாகும். எனினும், நாளுக்கு நாள் குணமடைந்து வருகிறேன். இந்த நேரத்தில் உங்கள் புரிதலுக்கும், ஆதரவுக்கும் நன்றி சொல்கிறேன். முழுமையாக திரும்ப எனக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படலாம். ஆனால், நான் மீள்வதற்கான பாதையில் இருக்கிறேன் என்பதில் மட்டும் உறுதி அளிக்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் மீண்டும் இணைகிறேன். உங்கள் முடிவில்லாத ஆதரவுக்காக அனைவருக்கும் நன்றி. இவ்வாறு நஸ்ரியா நசீம் கூறியுள்ளார். அவரது அறிக்கை திரையுலகினர் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் பல்வேறு யூகங்களை வெளியிட்டு வருகின்றனர்.

The post சில மாதங்களாக திடீரென்று காணாமல் போனது ஏன்?.. நடிகை நஸ்ரியா நசீம் பரபரப்பு அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: