குடியரசு தலைவரை வழிநடத்த அதிகாரமில்லை; சூப்பர் நாடாளுமன்றம் போல் நீதித்துறை செயல்பட முடியாது: நீதிபதிகள் மீது குடியரசு துணைத் தலைவர் தன்கர் பாய்ச்சல்


புதுடெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்தார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. மசோதாவுக்கு அனுமதி வழங்குவதில் ஆளுநருக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், ஆளுநர் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டுமென காலக்கெடு விதித்தனர். இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த மாநிலங்களவை பயிற்சித் திட்டத்தின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்று பேசியதாவது: சமீபத்திய தீர்ப்பின் மூலம் குடியரசு தலைவருக்கே ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாம் எங்கு செல்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது? நாம் மிகவும் உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும்.

யாராவது மறுஆய்வு மனு தாக்கல் செய்கிறார்களா இல்லையா என்பது பிரச்னை அல்ல. குடியரசு தலைவர் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார். இல்லையென்றால், அது சட்டமாக மாறும். எனவே, சட்டம் இயற்றும், நிர்வாக செயல்பாடுகளைச் செய்யும், சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படும் நீதிபதிகள் நம்மிடம் உள்ளனர். ஆனால் அவர்கள் எதற்கும் பொறுப்பேற்க மாட்டார்கள். ஏனெனில், நாட்டின் சட்டம் அவர்களுக்குப் பொருந்தாது. அரசியலமைப்பு சட்டத்தின் 142வது பிரிவு, எந்தவொரு விஷயத்திலும் முழுமையான நீதியை உறுதி செய்யும் உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு வழங்குகிறது. இதை ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஆயுத ஏவுகணையாக உச்ச நீதிமன்றம் மாற்றி உள்ளது. இந்த அதிகாரத்தின் மூலம் சட்டம் இயற்றுவது போன்ற பணிகளை நீதிமன்றம் செய்து வருகிறது.

குடியரசு தலைவர் என்பது மிக உயர்ந்த நிலையில் இருப்பவர். அவர் அரசியலமைப்பை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றுக் கொள்கிறார். அமைச்சர்கள், குடியரசு துணைத்தலைவர், எம்பிக்கள், நீதிபதிகள் உள்ளிட்ட மற்றவர்கள் அரசியலமைப்புக்கு கீழ்படிவதாக சத்தியப்பிரமாணம் செய்கிறார்கள். எனவே குடியரசு தலைவரை வழிநடத்தும் சூழ்நிலை நம்மிடம் இருக்க முடியாது. அரசியலமைப்பின் கீழ் நீதிமன்றத்திற்கு இருக்கும் ஒரே உரிமை, 145(3) பிரிவின் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே. அதுவும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் அமர்வாக இருக்க வேண்டும்.

ஒரு அரசு மக்களால் தேர்ந்தெடுக்கும் போது நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நீங்கள் கேள்விகள் கேட்கலாம். ஆனால், நிறைவேற்று அதிகாரம் நீதித்துறையிடம் இருந்தால், எப்படிக் கேள்வி கேட்பீர்கள்? தேர்தலில் மக்களிடம் செல்லும் போது யார் பொறுப்பேற்பது? நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகிய மூன்று அமைப்புகளும் மலர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதில் ஒருவர் களத்தில் மற்றொருவர் தலையிடும் எந்த சவாலும் நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி நீதிபதி மீது வழக்கு பதியாதது ஏன்?
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்ற விவகாரத்திலும் நீதித்துறையை தன்கர் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது: நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் 7 நாட்களாக யாருக்கும் தெரியாது. இந்த தாமதம் விளக்கக்கூடியதா? மன்னிக்கத்தக்கதா? இது சில அடிப்படை கேள்விகளை எழுப்பவில்லையா? இதுவே சாமானியர் வீட்டில் நடந்திருந்தால் ராக்கெட் வேகத்தில் நடவடிக்கை இருந்திருக்கும். இப்போது மாட்டு வண்டி வேகத்தில் கூட விசாரணை நடக்கவில்லை. இந்த விவகாரத்தில் 3 நீதிபதிகள் கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குற்றம் நிகழ்ந்தால், இந்த நாட்டில் யாருக்கு எதிராகவும், எந்தவொரு அரசியலமைப்புச் சட்ட அதிகாரிக்கு எதிராகவும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்.

குடியரசு துணைத்தலைவரான நானும் அதற்கு விதிவிலக்கல்ல. இதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. இதில், அரசியலமைப்புச் சட்டம், குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோருக்கு மட்டுமே விலக்கு அளித்துள்ளது. ஆனால் நீதிபதிகளாக இருந்தால், உடனடியாக வழக்கு பதிவு செய்ய முடியாது. அது நீதித்துறையில் சம்பந்தப்பட்டவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் அரசியலமைப்பு இவ்வாறு கூறவில்லை. அப்படியானால், சட்டத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் நீதிபதிகளுக்கு விலக்கு அளிப்பது எப்படி? இதன் தீய விளைவுகள் குறித்து அனைவரும் கவலை கொள்கிறார்கள். நீதித்துறையின் சுதந்திரம் விசாரணையை மறைப்பது அல்ல. இவ்வாறு கூறினார்.

The post குடியரசு தலைவரை வழிநடத்த அதிகாரமில்லை; சூப்பர் நாடாளுமன்றம் போல் நீதித்துறை செயல்பட முடியாது: நீதிபதிகள் மீது குடியரசு துணைத் தலைவர் தன்கர் பாய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: