மகாராஷ்டிர துணை முதல்வரை விமர்சித்த வழக்கு; நகைச்சுவை நடிகர் முன்ஜாமீன் மனு முடித்துவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மும்பை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளதால் அவரது முன்ஜாமீன் மனுவை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து, பாஜ கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதையடுத்து, குணால் கம்ரா மீது மும்பை காவல்துறை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் தனக்கு டிரான்சிட் முன் ஜாமீன் (வேறு மாநிலத்தில் பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்படும் மனு) கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குணால் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், மனுதாரர் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குணால் கம்ரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.சுரேஷ், வழக்கை ரத்து செய்ய கோரி குணால் கம்ரா தாக்கல் செய்த மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வரும் வரை குணால் கம்ராவை கைது செய்ய கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மும்பை உயர் நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளதால் இங்கு வழக்கை தொடர்ந்து நடத்த அவசியமில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

The post மகாராஷ்டிர துணை முதல்வரை விமர்சித்த வழக்கு; நகைச்சுவை நடிகர் முன்ஜாமீன் மனு முடித்துவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: