டிரம்பின் கூடுதல் வரிவிதிப்புக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இந்நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்க் இருவருக்கும் எதிராக அமெரிக்கா முழுவதும் பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ‘ஹான்ட்ஸ் ஆப்’ என்ற எதிர்ப்பு பேரணி அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பேரணியில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களும், உள்ளூர் ஆதரவாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப் பெரிய பேராட்டங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த போராட்டம், அமெரிக்கர்களிடையே அதிகரித்து வரும் விரக்தியைக் குறிக்கிறது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டிரம்ப் மற்றும் அவரது கொள்கைகளுக்கு எதிராகவும், அரசு நிர்வாகத்தில் எலான் மஸ்கின் தலையீடுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்களிலும், 150க்கும் மேற்பட்ட அமைப்புகளால் 1,200க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணிகள், போராட்டங்கள் நடந்தன. கடந்த ஜனவரியில் டிரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்றதில் இருந்து இதுவே மிகப்பெரிய ஒரு நாள் போராட்டமாக பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன், டி.சி. (தேசியப் பூங்கா), நியூயார்க் நகரம், பாஸ்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அப்போது ‘எங்களது ஜனநாயகத்தில் கைகளை வைக்காதே’, ‘எங்களது சமூகப் பாதுகாப்பில் கைகளை வைக்காதே’, ‘வெட்கக்கேடான முறையில் அதிகாரத்தைக் கைப்பற்றாதே’ என்று கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
The post ‘ஜனநாயகத்தில் கைகளை வைக்காதே’ என்ற கோஷத்துடன் டிரம்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: அமெரிக்காவில் 1,200 இடங்களில் பேரணி appeared first on Dinakaran.