யாரையோ திருப்திப்படுத்துவதற்காக பேசுகிறார் சைதை துரைசாமி சந்தர்ப்பவாதி வேலை வெட்டி இல்லாதவர்…கே.பி.முனுசாமி காட்டம்

கிருஷ்ணகிரி: சைதை துரைசாமி சந்தர்ப்பவாதி, வேலை வெட்டி இல்லாதவர், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக பேசுகிறார் என்று அதிமுக துணைபொதுச்செயலாளர் கேபி முனுசாமி கூறினார். கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமி எம்எல்ஏ., நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களின் சொத்தை பாதுகாப்பதாக ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் ராஜ்யசபாவில் எங்கள் எம்.பி.,க்கள் விரிவாக ஆய்வு செய்து இஸ்லாமியர்களை பாதுகாக்கும் வகையில் வக்பு திருத்த சட்டம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அந்த அடிப்படையிலேயே சட்டசபையில், வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக, திமுக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தோம். ராஜ்யசபாவில் எதிர்த்து ஓட்டளித்தோம். அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற சைதை துரைசாமி கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. நாங்கள் அதிமுகவில் தங்களை முழுமையாக ஆட்படுத்திக்கொண்டு வியர்வை சிந்தி உழைப்பவர்கள். ஆனால் சைதை துரைசாமி ஏதோ ஒரு காலத்தில் சில பதவிகளை அனுபவித்து விட்டு, வேலை வெட்டி இல்லாமல் உள்ளார்.

அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்களுடன் தொடர்பு உண்டு. யாரையோ திருப்தி படுத்துவதற்காக இது போன்ற கருத்துக்களை அவர் சொல்கிறார். கட்சிக்கு தொடர்பு இல்லாத நபர் கூறும் கருத்துக்களால், கட்சிக்காக உழைப்பவர்களிடம் கோபம் வரத்தான் செய்யும். செங்கோட்டையன், அதிமுக.,வின் முன்னோடி. அவரது பணியை சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக சைதை துரைசாமி போன்ற சந்தர்ப்பவாதிகள் ஏதாவது ஒரு கருத்தை கூறி ஊதி பெரிதாக்குகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post யாரையோ திருப்திப்படுத்துவதற்காக பேசுகிறார் சைதை துரைசாமி சந்தர்ப்பவாதி வேலை வெட்டி இல்லாதவர்…கே.பி.முனுசாமி காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: