பிளஸ்2 விடைத்தாள் திருத்த 1,400 ஆசிரியர்கள் நியமனம்

நாமக்கல், ஏப்.2: நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி 3 மையங்களில் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. விடைத்தாள் திருத்தும் பணியில் 1400 முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் 3ம்தேதி தொடங்கி 25ம் தேதியுடன் முடிவடைந்தது. பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 5ம்தேதி தொடங்கி கடந்த 27ம் தேதியுடன் நிறைவடைந்தது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வை, 18 ஆயிரத்து 461 மாணவ, மாணவியரும், பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வை, 18 ஆயிரத்து 966 மாணவ, மாணவியரும் எழுதினர். மாவட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள்களை சேகரிக்க, இரண்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த மையங்களில் இருந்து விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி வரும் 4ம் தேதி தொடங்குகிறது. நாமக்கல் சி.எம்.எஸ்., கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்பைரோ சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகம், திருச்செங்கோடு வித்யவிகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் எஸ்ஆர்வி எக்ஸல் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களில் பிளஸ்2 விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. இந்த மையங்களுக்கு வேறு மாவட்டங்களில் இருந்து விடைத்தாள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும் மையங்களின் முகாம் அலுவலராக நாமக்கல்லுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, திருச்செங்கோடுக்கு மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம், ராசிபுரத்திற்கு தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வரும் 4ம்தேதி முதன்மை தேர்வர்கள் மற்றும் கூர்ந்து ஆய்வு அலுவலர்கள் (மூத்த முதுகலை ஆசிரியர்கள்) விடைத்தாளை மதிப்பீடு செய்வார்கள். 5ம்தேதி முதல் உதவி தேர்வர்கள் விடைத்தாளை திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் சுமார் 1400 பேர் விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைந்துள்ள தாலுகாவில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் அந்தந்த மையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் 4ம்தேதி தொடங்கும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி வரும் 17ம் தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் 8 பேர் கொண்ட குழுவினர் விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மையங்களுக்கு வரும் விடைத்தாளின் எண்ணிக்கைக்கு ஏற்ப குழுவின் எண்ணிக்கை இருக்கும். நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்1, பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேறு மாவட்டங்களில் இருந்து விடைத்தாள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதே 3 மையங்களில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி வரும் 11ம்தேதி துவங்குகிறது. 3 மையங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணிக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post பிளஸ்2 விடைத்தாள் திருத்த 1,400 ஆசிரியர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: