பழைய சாதமா? புது சோறா?

பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிடர்களின் பிரசித்தமான பழமொழி. ஒரு ஜாதகத்தில் திரிகோண ஸ்தானங்கள் என்று சொல்லப்படுகின்ற லக்னத்தைத் தவிர்த்த ஐந்து, ஒன்பதாம் பாவங்களும், கேந்திரங்கள் என்று சொல்லக்கூடிய 1, 4, 7, 10 ம் பாவங்களும் வலிமை பெற வேண்டும். திரிகோணங்களில் பாவிகள் அமையக்கூடாது என்று சொல்லும் ஜோதிட சாஸ்திரம், கேந்திரங்களில் அதை அனுமதிக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சுபர்கள் கேந்திரங்களில் இருக்கும் பொழுது கேந்திராதிபத்திய தோஷம் வந்துவிடுகிறது ஆனால் பாபர்களுக்கு அது இல்லை. கேந்திரம் என்பது எல்லா கிரகங்களுக்கும் சுப பலன் தரக்கூடிய ஸ்தானமாக அமைகிறது. இன்னும் நுட்பமாகச் சொல்லப்போனால் கேந்திரங்களுக்கு ஸ்தானபலம் அதிகம். காரணம் கிரக பலன்கள் மாறும். ஆனால் ஸ்தான ஆதிபத்திய பலன்கள் வலுவாக இருக்கும்.நான்காம் இடம், தாயார், கல்வி, வாகனம், சுகம், வீடு முதலிய பல விஷயங் களைக் குறிக்கும். ஏழாம் இடம் என்பது லக்கினத்திற்கு நேர் எதிர் கேந்திரம். நட்பு, மனைவி அல்லது கணவன், மக்கள் தொடர்பு, சமூகத்தோடு இணைந்து வாழும் எண்ணம், சமூக அங்கீகாரம், திருமண வாழ்க்கை, இரண்டாவது குழந்தை, என பல விஷயங்களைக் குறிக்கும்.

ஆனால், பத்தாம் பாவம் எனப்படும் தசம கேந்திரம் ஒருவனுடைய ஜீவனத்தைக் குறிப்பது. கர்ம திரிகோணங்கள் எனப்படும் 2, 6, 10ம் பாவங்களில் பத்தாம் பாவம் மிக வலிமையானது. உத்தியோகத்தைக் குறிப்பது. புகழைக் குறிப்பது. கௌரவத்தைக் குறிப்பது. செய்யும் தொழிலைக் குறிப்பது. செய்யும் செயலைக் குறிப்பது அதனால் இதனை கர்ம பாவம் என்பார்கள்.இரண்டாம் பாவம் பணம், சொத்து முதலியவற்றைக் குறிப்பதால், தன குடும்ப ஸ்தானமாக அமைகிறது. ஆனால், இரண்டாம் பாவம் பத்தாம் பாவத்தின் வலிமையில் தான் சிறப்படையும் என்பதை மறந்துவிடக் கூடாது. தொழில் வருமானம் இல்லாவிட்டால் குடும்பம் ஏது?

ஒருவருக்கு தொழில், தொழில் மூலம் கிடைக்கும் வருமானம், சமூக அந்தஸ்து இவைகளெல்லாம் இல்லாவிட்டால், அவனுக்கு பணம் எப்படிச் சேரும்? குடும்பம் எப்படி நிம்மதியாக இருக்கும்? எனவே இரண்டாம் பாவத்தின் பாக்கியஸ்தானம், அதாவது ஒன்பதாம் பாவமாக பத்தாம் பாவம் வரும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதைப்போலவே பத்தாம் பாவத்துக்கு இரண்டாம் பாவம் பஞ்சம பாவமாக அமையும். அதாவது திரிகோண பாவமாக அமையும். ஒருவருக்கு எவ்வளவு செல்வம் சேரும் என்பது பத்தாம் பாவத்தின் விளைவாக வேலை, செயல்,வணிகம்,தொழில்)) வரும். அதை இரண்டாம் பாவத்தில் சேரும் செல்வத்தின் மூலமாகவும் குடும்ப அமைதியின் மூலமாகவும் குடும்ப விருத்தி மூலமாகவும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

ஏழாம் பாவமாகிய இல்லறம், நட்பு, இவற்றின் நான்காம் பாவமாக பத்தாம் பாவம் அமையும். பத்தாம் பாவத்தின் பத்தாம் பாவமாக ஏழாம் பாவம் அமையும். அதாவது பாவத் பாவம் என்பார்கள். இதை பலமுறை குறிப்பிட்டு இருக்கின்றோம். எனவே பத்தாம் பாவத்தின் வலிமையை ஏழாம் பாவத்தின் வலிமையைக் கொண்டும், தீர்மானம் செய்ய வேண்டும். ஏழாம் பாவம் மனைவி நண்பர்களைக் குறிக்கிறது என்று சொன்னால் அவர்களுடைய உதவி வலிமை இல்லாமல் பத்தாம் பாவமாகிய கர்ம பாவம் எப்படிச் செயல்படும்? அவனால் தொழிலோ, உத்தியோகமோ எப்படி நிம்மதியாகச் செய்ய முடியும்?

அதைப் போலவே ஏழாம் பாவமாகிய களத்திர பாவத்தின் சுகஸ்தானமாக பத்தாமிடம் அமைவதைக் கவனிக்க வேண்டும். மனைவியின் சுகம், அன்பு, அமைதி, குடும்ப வாழ்க்கை எல்லாமே கணவனின் தொழில், தொழில் விருத்தி, கணவருக்குக் கிடைக்கும் கௌரவம், பொருள் இவற்றைச் சார்ந்ததாகத்தானே இருக்கிறது. எனவே, 12 பாவச் சக்கரத்தை எப்படி எல்லாம் தொடர்புபடுத்தி நம்முடைய முன்னோர்கள் அமைத்திருக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்தால்தான் ஜோதிடத்தின் சூட்சும விதிகளை நம்மால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும்?

பத்தாம் பாவத்தின் வலிமையைக் குறைப்பது ஒன்பதாம் பாவம் என்பதை யோசித்துப் பாருங்கள் சில அற்புதமான விஷயங்கள் புலப்படும். ஒன்பதாம் பாவம் என்பது பாக்கியஸ்தானம் அதாவது முன்னோர்கள் வைத்து விட்டு சென்ற சொத்து குறித்த பாவம்.. இந்தச் சொத்து என்ன செய்யும் என்று சொன்னால், பத்தாம் பாவத்தை அதாவது ஒரு தொழிலையோ ஒரு காரியத்தையோ செய்யவிடாமல் ஓய்வாகவும் சோம்பேறித் தனமாகவும் பழைய சாதத்தை சாப்பிடும் படியும் (இங்கே பழைய சாதம் என்பது முன்னோர்கள் வைத்துவிட்ட சொத்து) அமைந்திருக்கும். அவர்கள் எந்தக் காரியத்திலும் ஊக்கமாக இருக்க மாட்டார்கள். காரணம் ஒன்பதாவது பாவத்தின் அதீதமான வலிமை பத்தாம் பாவத்தைச் செயல் பட விடாமல் தடுக்கும். (பத்தாம் பாவத்தின் பன்னிரண்டாம் பாவம் அல்லவா ஒன்பதாம் பாவம்)இதை உலகியலிலும் பார்க்கலாம். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்திற்கு ஏராளமான சொத்து. அவருடைய தந்தையார் இறக்கும் பொழுது நான்கு பிள்ளைகளுக்கும் வீடுகள், நிலம், பணம், நகை என்று ஏராளமாக வைத்துவிட்டு சென்றார். ஒரு 30 வருட காலத்திலேயே அத்தனையும் இழந்துவிட்டார்கள்.

இங்கே பாக்கியஸ்தானத்தின் அதிக வலிமை பத்தாம் பாவமாகிய ஜீவன ஸ்தானத்தைச் செயல்பட விடாமல் செய்து கொண்டே இருந்தது. அதனால் அவர்கள் ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்று சொன்னால் ‘‘சொத்து இருக்கிறது, நான்கு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாமே, ஏன் தொழில் செய்ய வேண்டும்? என்று எகத்தாளமாகச் சொல்வார்கள். படித்திருந்தும் அவர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. முன்னோர்கள் செய்த தொழிலையும் விவசாயத்தையும் கவனிக்காமல், அந்தத் தொழிலை கவனித்தவர்களை நம்பி ஏமாந்தார்கள். இன்னொரு அமைப்பில் 9ம் இடம் பலம் பெறவில்லை. வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவர்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டார்கள். ஆனால் பத்தாமிடம் வலிமை பெற்று, ஜீவன ஸ்தானம் வேலை செய்ததால், ஒரு வியாபாரத்தை வைத்து கிடுகிடு என்று முன்னேறி விட்டார்கள்.எனவே, ஒன்பதாம் இடத்தை விட 10-ஆம் இடம் கூடுதல் வலிமை பெற்றிருந்தால் பழைய சொத்தை விருத்தி செய்வார். ஒன்பதாம் இடம் மட்டுமே வலிமை பெற்று பத்தாம் இடம் வலிமை இழந்து இருந்தால் அவர்கள் தலைமுறையோடு அந்த சொத்து போய்விடும். ஒரு ஜாதகத்தில் ஒன்பதாம் இடமும், ஜீவன ஸ்தானமும் வலிமை இழந்து இருந்தால் அவர்கள் பாவம், பழைய சாதமும் (பூர்விக சொத்து) இருக்காது. புது சாதமும் கிடைக்காது.

The post பழைய சாதமா? புது சோறா? appeared first on Dinakaran.

Related Stories: