1. கல்யாண உற்சவம்
நம்முடைய ஆலயங்களிலே பற்பல உற்சவங்கள் நடைபெறுவதை நாம் காண்கிறோம். அனுபவிக்கிறோம். பங்கு பெறுகிறோம். இந்த உற்சவங்களில் மிகச் சிறப்பான உற்சவம் திருக்கல்யாண உற்சவம். இந்த உற்சவமானது அனேகமாக எல்லா ஆலயங்களிலும் நடைபெறுகிறது. சிவாலயங்களிலும் நடைபெறுகிறது. வைஷ்ணவ ஆலயங்களிலும் நடைபெறுகிறது. முருகன் ஆலயங்களிலும் நடைபெறுகிறது. ஏன், சௌரம் என்று சொல்லப்படும் சூரிய வழிபாட்டு முறையிலும் இந்தத் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
குறிப்பாக சூரியனார் கோயிலில் சூரியனுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுவதையும் பார்க்கலாம். இந்தத் திருக்கல்யாண உற்சவங்கள் எதற்காக நடத்தப்படுகின்றன? இதன் தத்துவம் என்ன? எந்தெந்த கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பு? போன்ற பல விஷயங்களை இந்த முத்துக்கள் முப்பது பகுதியில் காண்போம்.
2. சுவாமி திருக்கல்யாணம் ஏன்?
நாம் மனிதர்கள். கல்யாணம் செய்து கொள்கின்றோம். ஆனால் நம்மைப் படைத்த ஸ்வாமிகளுக்கு ஏன் திருக்கல்யாண உற்சவம் செய்ய வேண்டும்? அதுவும் வெவ்வேறு காலங்களில் நடக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் சில கோயில்களில் நடக்கிறது. இது அவசியம் தானா? என்ற கேள்வி எழும். உற்சவம் என்றாலே சந்தோஷம். அதாவது துக்கத்தை நீக்குவது என்று பொருள். கோயில்களில் உற்சவம் நடக்கின்ற பொழுது நாம் பங்கு பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறோம். திருக்கல்யாண உற்சவமும் நாம் மகிழ்ச்சியை பெறுவதற்காகத்தான் நடத்தப்படுகிறது.
3. எப்படி வாழ வேண்டும் என்பதைக்காட்டும் திருக்கல்யாண உற்சவங்கள்
இன்னொரு விஷயம். நாம் நம் இல்லற வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்கு எடுத்துக்காட்டும் இந்தத் திருக்கல்யாண உற்சவங்கள். உதாரணமாக சீதா கல்யாணம். ராமன் ஏகபத்தினி விரதனாக வாழ்ந்ததை எடுத்துக்காட்டுகிறது. அடுத்து இன்னொரு விஷயமும் இதில் இருக்கிறது. அதை உலகியலோடு இணைத்து நாம் காணலாம். நாம் நம்முடைய தாய் தந்தையர்களுக்கு அறுபதாம் கல்யாணம் (சஷ்டி அப்த பூர்த்தி), 80ம் கல்யாணம் (சதாபிஷேகம்) என்றெல்லாம் நடத்துகிறோம்.
அது ஒரு கிரக சாந்தி விழா என்றாலும்கூட, கல்யாணம் என்கிற பெயரில் தான் இருக்கிறது. கல்யாணம் என்றாலே மங்கலம் என்றுதான் பொருள். ஏற்கனவே திருமணமான தம்பதிகளுக்கு நாம் மறுபடி திருமணம் செய்து வைக்க வேண்டுமா? அவசியம் செய்து வைக்க வேண்டும். அவர்கள் திருமணத்தை நாம் பார்க்கவில்லை. நம்முடைய தாய் தந்தையர்களை ஜோடியாக உட்கார வைத்து திருமணம் செய்து பார்க்கக்கூடிய வாய்ப்பை சாஸ்திரம் நமக்குத் தந்திருக்கிறது.
4. நம்மைப் படைத்த இறைவனின் ஆசி வேண்டும்
நம்முடைய தாய் தந்தையர்கள் மணமேடையில் இணைந்து நமக்கு ஆசிவழங்குகிறார்கள். நம்மைப் படைத்த தாய் தந்தைக்கு நாம் திருக்கல்யாணம் செய்து வைப்பது போலவே, நம்மையும் இந்த உலகத்தையும் படைத்த எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்து நாம் மகிழ்கிறோம் என்பதுதான் உண்மை. தாய் தந்தையர்கள் மணமேடையில் பிள்ளைகளாகிய நம்மை ஆசிர்வதிக்கும் பொழுது அந்த ஆசீர்வாதத்திற்கு வலிமை அதிகம்.
அதைப் போல சுவாமி திருக்கல்யாண உற்சவத்தில் அவர்கள் அருள் வேண்டி நிற்கும் பொழுது, நாம் நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக முடியும். பல்வேறு விதமான தோஷத் தடைகள் விலகும். இது தவிர கோயில் வழிபாட்டை நிர்ணயிக்கக்கூடிய ஆகம விதிகள் திருக் கல்யாண உற்சவம் செய்ய வேண்டும் என்று நிர்ணயித்து இருக்கிறார்கள். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அந்த ஆகமங்களில் காணலாம். சுவாமி திருக்கல்யாண உற்சவம் கோயில் வழிபாட்டு முறையின் அங்கமாகவும் நடைபெறுகிறது.
5. எப்பொழுது சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும்?
திருக்கல்யாண உற்சவங்கள் திருமால் ஆலயங்களிலும், சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும், நடைபெறும். இத்திருமண உற்சவங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடைபெறுவது உண்டு. ஆகம விதிகளின் படி பெரும்பாலும் குடமுழுக்கு நடக்கின்ற தினம் மாலை திருக்கல்யாண உற்சவமும், திருவீதி வலமும் கட்டாயம் இருக்கும்.
இது தவிர, தலபுராண வரலாற்றின் அடிப்படையில் சில ஆலயங்களில், பிரம்மோற்சவங்களின் ஒரு அங்கமாக திருக்கல்யாண உற்சவம் நடைபெறும், இன்னும் சில ஆலயங்களில் பக்தர்களின் கோரிக்கைகளுக்காக அவர்கள் விரும்பும் நாள்களில் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைப்பார்கள். அதுவும் பங்குனி மாதம் வந்துவிட்டால், சொல்லவே வேண்டாம். பெரும்பாலான கோயில்களில் பெருவிழாவின் (பிரம்மோற்சவம்) அங்கமாக ஒருநாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
6. எந்தெந்த கோயில்களில் திருக்கல்யாணம் விசேஷம்?
சில ஆலயங்களில் அபூர்வமாக திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். சில ஆலயங்களில் அவ்வப்பொழுது நடைபெறும். ஒரு சில ஆலயங்களில் தினம் தோறும் நித்ய கல்யாண உற்சவம் நடைபெறும். அப்படி நடைபெறும் ஆலயங்கள் திருமலை, திருச்சானூர், காலஹஸ்தி. திருமலை பிரம் மோற்சவத்தை இன்றைக்கும் நாம் தினந்தோறும் காலை 12 மணிக்கு தரிசிக்கலாம். பிரமோற்சவம் முதலிய ஒரு சில கால கட்டங்களில் மட்டும் இந்தத் திருக் கல்யாணம் நடக்காது. திருச்சானூர் பத்மாவதி தாயார் சந்நதியில் தினம்தோறும் திருக்கல்யாண உற்சவம் உண்டு. இது தவிர னிவாச திருக்கல்யாண உற்சவத்தை வெவ்வேறு ஊர்களிலும் வேண்டுகோளின் பேரில் தேவஸ்தானத்தாரே நடத்துகின்றார்கள்.
7. ராதா கல்யாணம், ருக்மணி கல்யாணம்
திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வயானை திருமணம், திருவரங்கத்தில் பங்குனி உத்தரம் முன்னிட்டு சேர்த்தி உற்சவம், உறையூர் கமலவல்லித் தாயார் திருக்கல்யாணம், வில்லிபுத்தூரில் ஆண்டாள் திருக்கல்யாணம், தில்லை திருச்சித்திர கூடத்தில் தாயார் திருக்கல்யாணம், சித்திரை மாதத்தில் மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், திருமழபாடியில் நந்தித் திருக்கல்யாணம், ஐயப்பன் பூர்ண புஷ்கலா திருக்கல்யாணம், ஒப்பிலியப்பன் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணம் என்ன பற்பல திருக்கல்யாண வைபவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இது தவிர பாகவத சம்ப்ரதாயத்தில் பஜனை பத்ததியாக ராதா கல்யாணம், ருக்மணி கல்யாணம் என விசேஷமாக நடைபெறுவது உண்டு. வீட்டில் திருமணம் நடக்கின்ற பொழுது, முதல் நாள் சுவாமி திருக்கல்யாணம் நடத்திவிட்டு, வீட்டுக் கல் யாணத்தை நடத்திக் கொள்ளும் மரபும் சில இடங்களில் உண்டு.
8. திருக்கல்யாண சிறப்பு
ஆலயங்களில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தைக் காண்பது நம் கண்கள் பெற்ற பேறு என்று சொல்லலாம். யாருக்காவது திருமணத் தடை, கிரக தோஷங்கள் இருந்தால், கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தில் பங்கு பெறுவதும், உதவி செய்வதும், நாமே உபயதாரராக இருந்து திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பதும், திருமணத் தடைகளை அகற்றி, நல்லபடியாக திருமண நல்வாழ்வு கிடைக்கச் செய்யும் என்ற நம்பிக்கை உண்டு. பெரும்பாலும் இந்தத் திருக் கல்யாணங்களில் நடைபெறும் வைபவங்கள் (வரிசைக்கிரமங்கள்) நம்முடைய வீட்டில் நடைபெறும் திருமண வைபவங்களை ஒட்டியே இருக்கும். சிற்றில கோயில்களில் சில மாறுதல்கள் இருக்கும். சைவ வைணவ கோயில்களிலும் வேறுபாடுகள் உண்டு. ஆனால் அடிப்படையான பல விஷயங்கள் அதே வரிசையிலேயே நடந்து வரும்.
9. சுவாமியின் பிரதிநிதிகளாக புரோஹிதர்கள்
உற்சவ மூர்த்திகளுக்குத் தான் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும். மூல மூர்த்திகளுக்கு கிடையாது. அதற்காகத்தான் உற்சவமூர்த்தியின் திருவுருவங்கள் கோயிலில் வைக்கப்பட்டிருக்கின்றன. திருவீதி வலம் வருவதற்கும், உற்சவங்களில் கலந்து கொள்வதற்கும், கல்யாணம் நடத்துவதற்கும் இந்த உற்சவத் திருமேனிகள்தான் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்படும். பெருமாளுக்கும் தாயாருக்கும், அல்லது சிவனுக்கும் பார்வதிக்கும், அல்லது முருகனுக்கும் தெய்வானைக்கும் என்று எப்படி இருந்தாலும் மண மகன் (சுவாமி) சார்பில் ஒரு பட்டரோ, குருக்களோ இருப்பார். அதைப் போலவே மணமகள் (தாயார் அல்லது அம்பாள்) சார்பில் ஒரு பட்டரோ குருக்களோ இருப்பார்.
அவர்கள் அந்த சுவாமியின் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள். இன்னொரு விஷயம். நம்முடைய இல்லத்தில் நடைபெறும் திருமணங்களில்கூட ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம். மணப் பெண்ணும் மணமகனும் மணமேடையில் மகாவிஷ்ணு மகாலட்சுமி சொரூபமாகவே இருப்பார்கள் என்பதை கவனித்தால் இரண்டு திருமணங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருப்பதைப் பார்க்கலாம். எந்த உற்சவமாக இருந்தாலும் முதலில் அனுமதி கேட்டல் என்பது மந்திரப் பூர்வமாக நடத்தப்படும். அதற்கு அனுக்ஞை – {அனுமதி வாங்குதல்} என்று பெயர்.
10. விஷ்வக்சேன ஆராதனம்
அடுத்து பெருமாள் கோயில்களாக இருந்தால் விஷ்வக்சேனர் எனப்படும் சேனை முதலிகள் ஆராதனை நடைபெறும். சைவ மற்றும் முருகன் ஆலயங்களில் விக்னேஸ்வர ஆராதனம் எனப்படும் விநாயகர் பூஜை நடைபெறும். இதில் “சுக்லாம் பரதரம்” என்ற மந்திரம் இரண்டிலும் பொதுவாக இருக்கும். விஷ்வக்சேன ஆராதனையில் “யஸ்யத் விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா: பரஸ்ஸதம் விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தமாஸ்ரயே’’ என்று சொல்லி ஆவாஹனம் செய்வார்கள் திருக்கல்யாண உற்சவம் எந்தத் தடையுமின்றி நடைபெற வேண்டும் அதற்காக முதலில் இந்த ஆராதனை செய்யப்படுகின்றது.
திருக்கோயில்களின் எல்லா உற்சவங்களிலும், குடமுழுக்கு விழாக்களிலும் இந்த ஆராதனம் நடத்திவிட்டுதான் அடுத்த காரியத்தைப் பார்ப்பார்கள். வைணவர்கள் விஸ்வக்சேனரை கூர்ச்சத்தில் (முடிபோட்ட தர்ப்பைக் கட்டு) ஆவாகனம் செய்வார்கள். சைவர்கள் விநாயகரை மஞ்சளில் ஆவாகனம் செய்வார்கள். இந்தப் பூஜை செய்யும் பொழுது நாமும் நம் முடைய விக்னங்கள் தீர கற்பூர ஆரத்தியின் போது பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
11. சங்கல்பம்
எந்த உற்சவமாக இருந்தாலும் சங்கல்பம் என்பது மிக முக்கியமானது. சங்கல்பம் என்றது இந்தக் காலத்தில் இந்த காரியத்தை, இன்ன நோக்கத்திற்காக செய்யத் தீர்மானித்திருக்கிறேன் என்று உறுதி கூறுவதாகும். இதற்கு முன்னதாக பிராணயாமம் செய்யவேண்டும். காரணம் மூச்சு சீராக இருந்தால்தான் கவனம் கூர்மையாக இருக்கும் கவனம் கூர்மையாக இருந்தால்தான் செய்கைகளில் திருத்தம் இருக்கும் செய்கைகள் திருத்தமாக இருந்தால்தான் நோக்கம் நிறைவேறும். காயத்ரி ஜெபித்து சங்கல்ப மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
12. சங்கல்பத்தில் பொருள்
துரிதக்ஷயத்வாரா – பாபங்களும் நலிந்துபோகவும்,
ஸ்ரீ பரமேஸ்வர (மஹாவிஷ்ணு) ப்ரீத்யர்த்தம் – எல்லாம் வல்ல இறையின் இஷ்டத்துக்கு அமைவாக (வேத, ஆகம ரீதியாக),
சுபே சோபனே முஹூர்த்தே – சுபமான இந்த நல் முகூர்த்தத்தில் (ஒரு முகூர்த்தம் – இரண்டு நாழிகை – 48 நிமிடங்கள்),
அத்ய ப்ரஹ்மண – இன்றைய பிரம்மாவான ஆதிப்பிரம்மனின்,
த்விதீய பரார்த்தே – ஒரு நூறாண்டு கால ஆயுளின் இரண்டாம் பாதியில்,
ஸ்வேத வராஹ கல்பே – சுவேத வராஹ கல்பத்தில் (விஷ்ணு வெண்பன்றியாக அவதரித்தது இக் கல்பத்தில்),
வைவஸ்வத மன்வந்தரே – வைவஸ்வத மனுவின் காலத்தில் (மன்வந்தரத்தில்),
அஷ்டாவிம் சதிதமே – இருபத்தெட்டாவது சதுர் யுகத்தில்,
கலியுகே பிரதமே பாதே – கலியுகத்தின் ஆரம்ப பாகத்தில்,
ஜம்பூ த்வீபே – ஜம்பூ துவீபம் என்னும் பூலோக/ பால் வீதி அண்டத்தொகுதியில்,
பாரத வர்ஷே – பாரத வர்ஷம் என்னும் இந்தப் பூமியில்,
பரத கண்டே – பரத கண்டம் என்னும் இந்திய துணைக்கண்டத்தில்,
மேரோர் தக்ஷிணே பார்ஸ்வே – இங்குள்ள மேருவாகிய இமய மலைக்கு தென்பக்கத்தில்,
(இது பூமியில் இமயத்தை மையமாக வைத்து கண்டங்கள் நாடுகளின் அமைவிடங்களுக்கு ஏற்ப மாறி வரும்).
அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே – நமது தற்கால வழக்கிலுள்ள,
சாலிவாஹன சகாப்தே – சாலிவாஹன ஆண்டு வழக்கின் படி,
ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே – பிரபவ முதலான அறுபது ஆண்டுகளிலே,
(அமுக) ஸம்வத்ஸரே – (இன்ன) பெயருள்ள ஆண்டின் (உ-ம்: குருதி ஸம்வத்ஸரே),
(அமுக) அயனே – (இன்ன) அயனத்தில் (உ-ம்: தக்ஷிணாயனே/ உத்தராயணே),
(அமுக) ருதௌ – (இன்ன) ருதுவில் (உ-ம்: வசந்த ருதௌ),
(அமுக) மாசே – (இன்ன) மாதத்தில்,
(உ-ம்: மக/மாசி மாசே)
(அமுக) பக்ஷே – (இன்ன) பட்சத்தில்
(உ-ம்: சுக்ல பட்சே/ கிருஷ்ண பட்சே),
(அமுக/ஸுப) திதௌ – (இன்ன)
சுப திதியில் (உ-ம்: தசமி திதௌ),
(அமுக) வாசர யுக்தாயாம் – (இன்ன) கிழமையும் (உ-ம்: பானு வாசர யுக்தாயாம்),
(அமுக) நக்ஷத்ர யுக்தாயாம் – (இன்ன) நக்ஷத்திரமும் (உ-ம்: பரணி நக்ஷ்த்ர யுக்தாயாம்),
சுபயோக சுபகரண – சுபயோகம், சுப கரணம்,
விசேஷேன விசிஷ்டாயாம் – மிக்க விசேஷமும்,
அஸ்யாம் ஸுப திதௌ – கூடிய சுப நாளில்,
பார்வதீ ஸமேத பரமேஸ்வர (மஹாவிஷ்ணு)ப்ரீத்யர்த்தம் – பார்வதீ பரமேஸ்வரர் பிரீதிக்காகவும் (தங்கள் தங்களின் உபாசனைக் கடவுளர்களின் பெயரைச் சொல்லலாம்). இப்படிச் சொல்லி, யார் இதைச் செய்கிறார்களோ (எஜமானர்) அவர்களுக்காக அல்லது பொது மக்களுக்காக யோக ஷேமங்களை வரிசையாகச் சொல்லி பிரார்த்தனை செய்து, இந்த வைவாஹித திருக்கல்யாண மகோத்தவத்தை யதா சக்தி கைங்கரியம் ரூபமாகச் செய்கிறேன் என்று முடிக்க வேண்டும்.
13. கிரகப் பிரீதி தானம்
எந்த விழாவாக இருந்தாலும், உற்சவமாக இருந்தாலும், வழிபாடாக இருந்தாலும், தானம் என்பது, ஒரு அங்கமாக இருக்கும். கும்பாபிஷேகத்தில் தசதானம் என்று 10 வகையான தானங்களைச் செய்வார்கள். அதைப் போலவே யாத்ரா தானம் (சுவாமி புறப்பாடு, கும்பாபிஷேகத்தில் கும்பம் புறப்பாடு) முன்னால் உபயதாரர்கள் செய்வது உண்டு. அதைப் போலவே க்ரஹப் பிரீதி தானம் செய்ய வேண்டும்.
நவகிரகங்களும் அனுகூலமாக இருக்க, திருக்கல்யாணத்தில் எழுந்தருளியிருக்கும் சுவாமி, அம்பாள் அல்லது பெருமாள் தாயார் அனுக்கிரகம் பூரணமாகக் கிடைக்க, எல்லாவிதமான கோரிக்கைகளும் நிறைவேற, (சமஸ்த அபீஷ்ட சித்யர்த்தம்) என்று சொல்லி, “என்னால் முடிந்த ஹிரண்ய தானத்தை (வெற்றிலை பாக்கில் வைத்து பொன், பணம்) கொடுக்கிறேன். இது எனக்கு உரியதல்ல (நமம) இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்தித்துச் செய்யும் முறை ஒன்று உண்டு. சில இடங்களிலே இது இல்லாமலும் செய்வதுண்டு. அது அந்தந்த வழக்கம், நேரம், காலம், இவற்றை ஒட்டியது.
14. புண்ணியாக வாசனம்
உரிய மந்திரங்களால் கலசத்தில் நீரினை நிரப்பி பூஜித்து தீர்த்தமாக்கி தூய்மை பெறச் செய்வது “புண்ணியாக வாசனம்” ஆகும். எந்த ஒரு வைதீக கர்மாவும் செய்வதற்கு முன்னால், அந்த இடத்தையும், அதில் பயன்படுத்தும் பொருளையும், மந்திர பூர்வமாக சுத்தி செய்வது புண்ணியாக வாசனம். கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கும்பத்தில் நீர் நிரப்பி, மந்திர பூர்வமாக வருண மந்திரத்தையோ அல்லது வருணனை அந்தர்யாமியாக கொண்ட பெருமாள் மந்திரத்தையோ, ஜபித்து பிறகு அந்த நீரைக் கொண்டு இடத்தையும் பொருள்கள் மீதும் தெளித்து சுத்தி செய்வார்கள். இதிலும் சில வேறுபாடுகள் உண்டு.
பெருமாள் கோயில்களில் பெருமாள் விஷயமாக புண்ணியாவாசனம் செய்யும்பொழுது அதற்கென்றே உரிய வாசுதேவ புண்ணியாவாசனம் மந்திரத்தைச் சொல்லுவார்கள். “கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு’’ என்று சப்த புண்ணிய நதிகளையும் ஆவாகனம் செய்து இந்த புண்ணியாக வாசனத்தை நடத்துவார்கள். இதில் ஆத்ம சுத்தி உண்டு கர்ம சுத்தி உண்டு. சகல திரவிய சுத்தி உண்டு. யாகசாலை சுத்தி உண்டு. பாகசாலை சுத்தி உண்டு.
15. மாலை சூட்டல்
“இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்’’
– என்று பாடினாள் ஆண்டாள்.
திருக்கல்யாண உற்சவத்தின் அற்புதமான நிகழ்வு மாலை மாற்றுதல் நிகழ்வு. சில கோயில்களில் உற்சவ மூர்த்திகளை, படிச் சட்டத்தில் எழுந்தருளச் செய்து, எதிர் எதிராக நிற்க வைத்து, மேளதாளத்தோடு ஆடி ஆடி, மூன்று முறை மாலை மாற்றி, பிறகு ஆஸ்தானத்திலோ, ஊஞ்சல் பலகையிலோ எழுந்தருளச் செய்து கல்யாண வைபவத்தை நடத்துவார்கள். இன்னும் சில கோயில்களில் திருக் கல்யாணத்தின் நிறைவில் மாலை மாற்றுவார்கள். எது எப்படி இருந்தாலும் இந்த மாலை மாற்றுதல் நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதற்கென்றே பாடல்களும் உண்டு.
“மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள்’’
இதே பாடல் வீட்டு கல்யாணத்தில் நலங்கு வைக்கும் போது பாடுவதுண்டு. பட்டரும் குருக்களும் உற்சவ மூர்த்திகளின் பிரதிநிதிகளாக இந்த மாலை மாற்றும் வைபவத்தை நடத்தி வைப்பார்கள்.
16. வெள்ளிக் கிழமைகளில் மாலை மாற்றுதல்
பொதுவாக பெருமாள் கோயில்களில் எம்பெருமானின் மாலை தேவி பூதேவி முதலிய நாச்சிமார்களுக்கு சூட்டப்படும். ஆனால் சூடிக்கொடுத்த சுடர் கொடியான ஆண்டாள் திருமணத்தின்போது ஆண்டாள் மாலையை ஏற்றுக் கொண்டு பெருமாள் மாலை பிறகு தருவார். பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் நடந்தாலும், மார்கழி மாதத்தில் போகி பண்டிகை அன்று ஆண்டாள் திருக்கல்யாணம் பெரும்பாலான கோயில்களில் நடைபெறும்.
வில்லிபுத்தூரில் உற்சவம் சிறப்பாக நடைபெறும். அன்று திருப்பதியில் இருந்து ஆண்டாளுக்கு மலர்மாலைகள் வரும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் போகி கல்யாணம் விமர்சையாக நடைபெறும். இந்த மாலை மாற்றுதல் நிகழ்ச்சி பெரும்பாலான பெருமாள் கோயில்களில் ஆடி வெள்ளிக் கிழமைகளிலும், தை வெள்ளிக் கிழமைகளிலும், நவராத்திரி 10 நாட்களிலும் நடைபெறும். தாயார் புறப்பாடு நடந்து பெருமாள் சந்நதிக்கு முன் வர, பெருமாளிடம் இருந்து தாயாருக்கு மாலை வரும். அது தாயாருக்கு சாத்தப்பட்டு, பின் தாயார் மாலைகளைந்து பெருமாளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சாத்தப்பட்டு கற்பூர ஆரத்தி நடக்கும். எனவே இந்த மாலை மாற்றுதல் நிகழ்ச்சி முக்கியமான நிகழ்ச்சி.
17. திருஷ்டி
கல்யாண மாப்பிள்ளை பெண் என்றால் புடவை, பட்டு வஸ்திரம் அளிக்க வேண்டும் அல்லவா! இந்த வஸ்திர தாரணம் செய்து, அலங்காரமான உற்சவ மூர்த்திகளுக்கு கண் பட்டு விடுமே என்று திருஷ்டி சுற்றுவார்கள். இதற்கென்று அன்னத்தைத் தயாரித்து அதில் வர்ணங்களைக் கலந்து, உருண்டையாக்கி, திருஷ்டி சுற்றி திசைக்கு ஒன்றாகப் போடுவார்கள். இதற்கென்று பெரியாழ்வார் பாசுரம் ஒன்று உண்டு.
“திண்ணார் வெண்சங்குடையாய்! திருநாள்
திருவோணமின் றேழுநாள் முன்
பண்ணோர் மொழியாரைக் கூவி
முளையட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும்
கலத்தரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா! நீ நாளைத்தொட்டுக்
கன்றின்பின் போகேல் கோலம் செய்திங்கேயிரு’’
இது யசோதை கண்ணனிடம் கூறுவதாக அமைந்த பாடல். “கண்ணா, உனக்குத் திருமணம் செய்ய நிச்சயித்து விட்டேன். நீ அங்கங்கே சுற்றிக் கொண்டு இருக்காதே. திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ததோடு விருந்து படைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்திருக்கிறேன். நீ நாளை முதல் மாடு கன்று மேய்ப்பதற்காகக் காட்டிற்குச் செல்லாதே. உன்னை அழகுபடுத்திக் கொண்டு இங்கே இரு’’இப்பொழுதும் பெண் மாப்பிள்ளைக்கு நலுங்கு வைத்துவிட்டால் திருமணம் முடிகின்ற வரை எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காக, வெளியேவிட மாட்டார்கள். அப்படி ஒரு ஏற்பாடு செய்து வைத்திருப்பார்கள். சுவாமி திருக்கல்யாணத்திலும் இந்த வைபவம் நடத்தி காண்பிக்கப்படும்.
18. பாலிகை பூஜை
இதற்கென்று ஒரு இடத்தில் ஐந்து மண்ணால் செய்யப்பட்ட பாலிகைகளை வைத்து மந்திர பூர்வமாகச் சுத்தப்படுத்தி, அதில் நவதானியங்களை விதைப்பார்கள். இதில் கிழக்கே இந்திரனையும், தெற்கே யமனையும் (தர்மராஜன்) மேற்கே வருணனனையும், வடக்கே குபேரனையும் நடுவே பிரம்மத்தையும் ஆவாகனம் செய்து, அதற்கு அர்க்ய பாத்ய பூஜைகளைச் செய்து பாலை தெளித்து ஒளஷத சூக்தம் சொல்லி வணங்குவார்கள்.
இதுவும் உலகியல் திருமணத்தில் உள்ள மரபுதான். முளைப்பாரி எடுத்தல் என்ற அம்சத்தின் ஒரு வடிவம்தான் இந்த பாலிகை பூஜை. திருக்கல்யாண உற்சவம் மட்டுமல்லாது மற்ற உற்சவங்களின் இதைச் செய்வார்கள். இதன் மூலமாக தனதான்யங்கள் நல்ல முறையில் விளைச்சல் மிகுந்து, பசுமாடுகள் நன்றாகப் பால் கறந்து, உயிரினங்கள் சிரமில்லாத செல்வ வாழ்க்கையை வாழ்வார்கள்.
19. கங்கண தாரணம்
காப்பு கட்டுதல் என்பது விழாக்கள், உற்சவங்கள், லௌகீக விழாக்கள், என எல்லாவற்றிலும் ஒரு அங்கமாக விளங்குவது. இது சுவாமி திருக்கல்யாணத்திலும் உண்டு. மஞ்சள் கயிற்றை தேங்காயின் மீது வைத்து அதில் அஷ்ட நாகங்களையும் பிரதிஷ்டை செய்து, மந்திர பூர்வமாக ஜபம் செய்து, பெருமாளின் வலது கரத்திலும், பெருமாள் வலது கரத்தில் கொடுத்து வாங்கி, அதை பிராட்டியின் இடது கரத்திலும் கட்டுவார்கள். “காப்பு நாண் கட்டக் கனாக்கண்டேன்’’ என்று ஆண்டாளின் பாசுரத்தில் இந்த கங்கண தாரண நிகழ்ச்சி வருகிறது. வைதீகமான விஷயத்தைத்தான் ஆண்டாள் திருமணப் பாடலில் பாடி இருக்கின்றாள்.
20. மது வர்க்கங்களை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி
அதற்குப் பிறகு சில இடங்களில் பூணூல் போடும் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொரு இடத்திலும் சற்று முன்பின்னாக மாறும். இடையில், பாலால் கால் அலம்பி, பால் பழம் தரும் நிகழ்ச்சியும், தேன் முதலிய மது வர்க்கங்களை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியும் உண்டு.
21. அக்னி பிரதிஷ்டை, ஹோமங்கள்
அக்னி பிரதிஷ்டை இல்லாத உற்சவங்களே இருக்க முடியாது. எந்த வைபவமாக இருந்தாலும் கும்பத்தில் வருணனையும், யாக குண்டத்தில் அக்னியையும் ஆராதித்து, அதற்குப் பிறகுதான் அந்த வைபவத்தை நடத்த வேண்டும். காரணம், அக்னி பகவான் மூலம் தான் நாம் எதையும் இறைவனுக்கும் மற்ற தேவதைகளுக்கும் சமர்ப்பிக்க முடியும். எனவே சுவாமி திருக்கல்யாண வைபவத்தில் முறையான அக்னி பிரதிஷ்டை நடைபெற்று அந்தந்த தேவதைக்குத் தகுந்த படியாக ஹோமங்கள் நடைபெறும்.
22. கோத்ர பிரபாவம், கன்யாதானம்
சுவாமி திருக்கல்யாண வைபவத்தில் மிக முக்கியமானது கன்யாதானம். கன்னியாதானம் செய்வதற்கு முன் கோத்ர பிரவரம் என்று பெருமாள் பிராட்டி இருவருடைய குல முறையை இரண்டு புரோகிதர்கள் மூன்று முறை சொல்லுவார்கள். சிவன் கோயில்களிலும் முருகன் ஆலயங்களிலும் இந்த கோத்திர பிரவரம் கட்டாயம் இருக்கும். ஒவ்வொரு சுவாமிக்கும் ஒரு நட்சத்திரம் உண்டு. ராசி உண்டு. பிறப்பில்லாத பெருமான் எந்த நாளில் அந்தத் திருத்தலத்தில் தோன்றினானோ அல்லது அவதரித்தானோ (ராமர் புனர்பூசம், கிருஷ்ணன் ரோகிணி) என்பதுதான் அந்தப் பெருமாளின் ராசி நட்சத்திரமாக கொள்ளப்படுகிறது. அதைப் போலவே பிராட்டிக்கும் ராசி நட்சத்திரம் உண்டு. ஆண்டாளின் நட்சத்திரம் பூரம்.
ரங்கம் பெரிய பிராட்டியாரின் நட்சத்திரம் உத்திரம். அடுத்து மூன்று தலைமுறையையும் இந்த கோத்திர பிரவரத்தில் சொல்லுவார்கள். ராமரைச் சொன்னால் ராமன், ராமனுடைய தந்தை தசரதன், தசரதனுடைய தந்தை அஜ மகாராஜன் என்று மூன்று தலைமுறைகளையும் சொல்வது உண்டு. தானே தோன்றியதாக இருந்தால் அயோநிஜ அல்லது அயோநிஜை என்று வரும். சுவாமியின் திருக்கல்யாண உற்சவத்தில், கம்பீரமான குரலில் சொல்லப்படும் கோத்திர பிரவரத்தைச் செவி மடுக்க வேண்டும். அதைக் காதால் கேட்பதே நம்முடைய பாவங்களைப் போக்கிவிடும். அதற்குப் பிறகு கன்யாதானம் நடைபெறும்.
23. மாங்கல்ய பூஜை, மாங்கல்ய தாரணம்
மாங்கல்ய தாரணத்தின் பொழுது “மாங்கல்யம் தந்துனானே” என்ற ஸ்லோகத்தைச் சொல்லுகின்றோம். மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா, கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்…’ இதன் பொருள் இதுதான்.மம ஜீவன ஹேதுனா – என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி இருப்பவளே, மாங்கல்யம் தந்துனானே – இந்த மங்கல நாணை, கண்டே பத்னாமி – உன் கழுத்தை சுற்றி அணிவித்து (நம் உறவை உறுதி செய்கிறேன்) சுபகே – மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே, த்வம் சஞ்சீவ சரத சதம்” – நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!
இதில் மம ஜீவன ஹேதுனா என்கிற வார்த்தையை மாற்றி சுவாமிக்கு திருமாங்கல்ய தாரணம் செய்யும் பொழுது லோக ஜீவன ஹேதுனா என்று சொல்லுவார்கள். என்னுடைய வாழ்க்கைக்கு என்று சொல்லாமல், உலகத்தார் நன்றாக இருப்பதற்கு இந்த மாங்கல்ய தாரணம் நடக்கிறது என்பது பொருள். திருக்கல்யாணம் நடைபெற்றால் அந்த தெய்வ தம்பதிகளின் பேரருள் எல்லோருக்கும் கிடைத்து, எல்லோரும் நன்றாக வாழ்வார்கள் என்பதற்காகத்தானே, ஆலயங்களில் திருக்கல்யாண உற்சவங்களை நடத்துகின்றோம்.
24. அம்மி மிதித்தல்,
“இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி
செம்மை யுடையதி ருக்கையால் தாள்பற்றி
அம்மிமி திக்கக்க னாக்கண்டேன் தோழீநான்’’
– என்று ஆண்டாள் நாச்சியார் பாடி இருப்பதால், அம்மி மிதிக்கும் வைபவம் நடைபெறும்.
பெருமாள் கோயில்களில் எம்பெருமான் திருவடிக்குப் பதிலாக சடாரி (அதுதானே திருவடி) எழுந்தருளச் செய்யப்பட்டு, அம்மியில் கோலம் போட்டு, தர்ப்பையைப் பரப்பி, இந்த வைபவத்தை நடத்துவார்கள். சப்தபதி என்று வைபவம் சொல்லக்கூடிய வைபவம் வீட்டு திருமணங்களிலும் உண்டு.
25. லாஜ ஹோமம், பூர்ணாகுதி
அதற்கடுத்து,
“வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து
பொரிமுகந் தட்டக்க னாக்கண்டேன் தோழீநான்’’
என்று ஆண்டாள் பாடியதற்கு ஏற்ப லாஜஹோமம் எனப்படும் பொரி இடுதல் நடைபெறும். சுவாமி தாயாரின் பிரதிநிதியாக புரோகிதர் நெய் தொட்டு இந்தப் பொரியை மூன்று முறை அக்கினி வலம் வந்து அக்கினியில் இடுவார். அதற்கான மந்திரங்கள் உண்டு. அதற்கு பிறகு பூர்ணாகுதி நடைபெறும்.
26. வாரணமாயிரம்
வைணவக் கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மிக விசேஷமாக “வாரணம் ஆயிரம்’’ எனப்படும் தேங்காய் உருட்டல் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக மஞ்சள் படுத்தப்பட்ட இரண்டு தேங்காய்களை இரண்டு புரோகிதர்கள் கையில் வைத்துக் கொண்டு, பெருமாளும் தாயாரும் உருட்டுவதாக பாவனை செய்து, வாரணம் ஆயிரம் பத்து பாசுரங்களையும் பாடிக் கொண்டே உருட்டுவார்கள். ஒன்பதாம் பாசுரம் பாடி முடித்தவுடன் ஆண்டாள் சம்பாவனை என்று சம்பாவனை வழங்கப்படும். கோயில்களில் நடத்தப்படும் இதே வைபவம் வைணவர்கள் தங்கள் இல்லங்களில் நடக்கும் திருமணத்திலும் சீர் பாடல் என்று சொல்லி நடத்துவார்கள்.
27. அட்சதா ஆசீர்வாதம்
இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், அட்சதையை எடுத்து பெருமாள் பிராட்டி இருவரின் தோளின் மீதும் இட்டு அதை ஒரு பட்டு வஸ்திரத்தில் ஏந்திக் கொள்வார்கள். பிராட்டி பெருமாளுக்கும், பெருமாள் பிராட்டிக்கும் செய்வதாக பாவனை. அதற்குப் பிறகு புரோகிதர்கள் அனைவரும் ஆசிர்வாத பஞ்சாதிகளைச் சொல்லி அட்சதை இடுவார்கள்.
28. நிவேதனம் சாற்று முறை
அட்சதா ஆசிர்வாதம் என்பது திருக்கல்யாண வைபவத்தின் நிறைவைக் குறிப்பது. அதன் பிறகு திரை போட்டு தளிகை கண்டருளப் பண்ணுவார்கள். தொடர்ந்து சாற்று முறை எனப்படும் நிகழ்வு நடைபெறும். திருக்கல்யாணம் முடிந்தவுடன், திருவீதி வலம் வரும் நிகழ்ச்சி பல இடங்களில் உண்டு. ஆண்டாளும், இதைப் பாடி இருக்கின்றாள்.
“குங்கும மப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மணநீர்
அங்கவ னோடுமுடஞ் சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்’’
யானையின் மேல் மங்கல வீதி வலம் சென்றதாக ஆண்டாளின் பாசுரத்தில்
வருகிறது. எனவே திருவீதி வலம் உண்டு.
29. திருக்கல்யாண உற்சவத்தில் நம் பங்கு
திருக்கோயில்களில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தில் நம்முடைய பங்கு இருக்க வேண்டும். சிலர் மங்கலப் பொருட்களைப் (வளையல், மஞ்சள், குங்குமம்) படைத்து அதை பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள். இன்னும் சிலர் சுவாமிக்கு மாலை, வஸ்திரம் முதலியவற்றைச் சமர்ப்பிப்பார்கள். நீங்கள் எந்த பொருளைக் கொடுக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. எந்த மனநிலையில் கொடுக்கிறீர்கள் என்பது முக்கியம். எதுவும் முடியாவிட்டாலும், “பூசும் சாந்து என் நெஞ்சமே, புனையும் கண்ணி எனது உடைய வாசகம் செய் மாலையே, நேசமான அணிகலனும் என் கைகூப்புச் செய்கையே’’ என்று அதில் கலந்து கொண்டு, இரு கைகளையும் கூப்பி அஞ்சலி செய்ய வேண்டும்.
30. கல்யாண உற்சவ பலன்கள்
திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்வதால் ஏற்படும் பலன்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. பொதுவாகவே கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். திருமணத்தடை நீங்கி, பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். செல்வம் சேரும். துக்கங்கள் குறையும். ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆயுள்தோஷம் நீங்கும். சகல செல்வங்களும் சேரும். திருமணம் ஆகி வெகுகாலம் குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல சந்தான விருத்தி கிடைக்கும். இதோ அதற்கான சான்றுப் பாடல்
“ஆயனுக் காகத்தான் கண்டக னாவினை
வேயர்பு கழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்
தூயத மிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயுநன் மக்களைப் பெற்றும கிழ்வரே’’
இதில் பிள்ளைகள் பிறக்கும் என்று சொல்லவில்லை. வீட்டுக்கும் நாட்டுக்கும் உபயோகமான பக்தி உடைய பிள்ளைகள் பிறப்பார்கள் என்று சொல்லி இருப்பதையும் கவனிக்க வேண்டும். இதோ, பங்குனி மாதம் பிறந்துவிட்டது. பற்பல கோயில்களிலும் திருமண வைபவங்கள் களைக்கட்டும். அந்தத் திருமண வைபவங்களில் நாம் குடும்பத்தோடு கலந்து கொண்டு சீர் பெறுவோம்.
எஸ். கோகுலாச்சாரி
The post திருக்கோயில்களில் நடைபெறும் தெய்வத் திருமணங்கள் appeared first on Dinakaran.