தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் இயற்கை வேளாண்மை பரவலாக்க ரூ.12 கோடி

இயற்கை வேளாண்மையைப் பரவலாக்கம் செய்திடும் விதமாக பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் மொத்தம் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஒருங்கிணைத்து, குழுக்கள் அமைத்து 7,500 உழவர்கள் பயனடையும் வகையில் இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் இரண்டாண்டுத் திட்டமாக செயல்படுத்தப்படும். இயற்கை மற்றும் உயிர்ம வேளாண் முறைகளில் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் விளைபொருட்கள் எளிதில் நுகர்வோருக்குக் கிடைக்கச்செய்யும் வகையில், தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் பொருட்களை பூமாலை வணிகவளாகம் உள்ளிட்ட அரசுக் கட்டடங்களில் சந்தைப்படுத்த, உரிய வசதிகள் செய்து தரப்படும். உழவர்களிடையே உயிர்ம வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பரவலாக்கம் செய்திட, 37 மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த, 38,600 மாணவர்கள் உயிர்ம வேளாண் பண்ணைகளுக்குக் ‘கண்டுணர் சுற்றுலா’ அழைத்துச் செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். உயிர்ம வேளாண் முறையில் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு வேளாண் விளைபொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தி, ஏற்றுமதி செய்ய, எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனை செய்வதற்கான கட்டணத்திற்கு, முழு மானியம் வழங்கப்படும். உயிர்ம வேளாண் நிலையை அடைந்த உழவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும், மேலும், உயிர்ம வேளாண்மை சான்றிதழ் பெற, உழவர்கள் பதிவு செய்வதற்கான கட்டணத்திற்கு முழு விலக்கு அளித்து, இலவசமாகப் பதிவு செய்யப்படும்.

* சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.52.44 கோடி ஒதுக்கீடு
வேளாண் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், தமிழ்நாடு அரசால், 2023-24ம் ஆண்டு முதல் 2027-28ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுத் திட்டமாக அறிவிக்கப்பட்டு, வேளாண்மை சார்ந்த அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. உழவர் குழுக்கள் அமைத்தல், பயிர் சாகுபடித் தொகுப்பு மானியம் வழங்குதல், வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைத்தல் போன்ற திட்டக்கூறுகளோடு, 52 கோடியே 44 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில், 2025-26 ம் ஆண்டிலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.40.27 கோடி : 79,000 உழவர்கள் பயனடைவார்கள்
மானாவாரியிலும் அதிக மகசூல் தந்து, உழவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்க செய்வதில், மக்காச்சோள பயிர் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் மக்காச்சோளம் 10 லட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, 28 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்காச்சோள சாகுபடி மூலம் உழவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்க செய்யும் வகையில், மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம் 1 லட்சத்து 87 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 79 ஆயிரம் உழவர்கள் பயனடையும் வகையில், ரூ.40.27 கோடி ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

* கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உழவர்கள் பயனடைய ரூ.269.50 கோடி ஒதுக்கீடு
அனைத்து சிற்றூர்களையும் தன்னிறைவு பெற செய்யும் நோக்கத்தோடு தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி, உழவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் முயற்சியில் ‘‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்” கடந்த 4 ஆண்டுகளில் 10,187 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2025-26ம் ஆண்டில், மீதமுள்ள 2,338 கிராம ஊராட்சிகளில், சுமார் 9 லட்சத்து 36 ஆயிரம் உழவர்கள் பயனடையும் வகையில், ரூ.269.50 கோடி மாநில நிதி ஒதுக்கீட்டில், தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* 90 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் எண்ணெய் வித்துகள் இயக்கத்திற்கு ரூ.108.6 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு போன்ற பிரதான எண்ணெய்வித்து பயிர்கள் சராசரியாக 10 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. உணவு எண்ணெய் தேவையில் தன்னிறைவு அடையும் வகையில், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய பயிர்களின் பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு, எண்ணெய் வித்துகள் இயக்கம், 2025-26ம் ஆண்டில் 2 லட்சத்து 16 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சுமார் 90 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.108.6 கோடி ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

* 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்ய மானியமாக ரூ.24 கோடி நிதி
தற்போதுள்ள வேளாண் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கோடை உழவு செய்வது பரவலாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 56 லட்சத்து 41 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் பருவமழையை மட்டுமே ஆதாரமாக கொண்டு பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனவே, 2025-26ம் ஆண்டில் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்திட, ஹெக்டருக்கு 2,000 ரூபாய் வீதம் மானியம் வழங்க 24 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* டெல்டா அல்லாத மாவட்டங்களில் உழவர்களுக்கு சிறப்பு தொகுப்பு வழங்க ரூ.102 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் சராசரியாக 34 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கார், குறுவை, சொர்ணவாரி பருவங்களில் நெல் சாகுபடி பரப்பினை அதிகரித்து, உணவு தானிய உற்பத்தியினை உயர்த்திட டெல்டா அல்லாத மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு உழவர்களுக்கு வழங்கப்படும். நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற விதைகள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.102 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதேபோல் டெல்டா மாவட்டங்களில் சராசரியாக 18 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறுவைப்பருவத்தில், நெல் சாகுபடி பரப்பினை அதிகரித்து. உணவு தானிய உற்பத்தியினை உயர்த்திட டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு உழவர்களுக்கு வழங்கப்படும். நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற விதைகள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மல்லிகை சாகுபடியை ஊக்குவிக்க 60 ஒரு கோடியே லட்சம் நிதி ஒதுக்கீடு
மலர்கள் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு மானியம் வழங்க ரூ. 8 கோடியே 51 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 6.200 ஏக்கரில் மலர்கள் சாகுபடி செய்யும் சுமார் 9,000 உழவர்கள் பயன்பெறுவார்கள். மல்லிகை தமிழ்நாட்டில் 42.000 ஏக்கரில் பயிரிடப்பட்டு இரண்டு லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மதுரை, தர்மபுரி, திருவள்ளூர், சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 2025-26ம் ஆண்டில் 3,000 ஏக்கரில், ஒரு கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் ஏழாயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் மல்லிகை சாகுபடி ஊக்குவிக்கப்படும். தமிழ்நாட்டில் ரோஜா மலர்கள் 9.600 ஏக்கரில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ரோஜா மலர் சாகுபடியினை ஊக்குவிக்க, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மின்சார இணைப்பு இல்லாத உழவர்களுக்கு சூரியசக்தி பம்புசெட்டுகள் திட்டம்
வானமெங்கும் பரிதியின் சோதி; மலைகள் மீதும் பரிதியின் சோதி; என மகாகவி பாரதியின் பாடலில் தரணியெங்கும் ததும்பியுள்ள தனது ஒளியால், சூரியன் உலகத்தினை வாழ்விக்கின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளதைப் போலவே, விவசாயத்திலும் சூரிய ஆற்றல் புதிய வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. உழவர்களுக்கு பாசனத்திற்கான ஆற்றலினை வழங்குவதன் மூலம், அவர்களின் வருமானத்தை அதிகரித்திடவும், விவசாயத்தில் மரபுசார் ஆற்றல் உபயோகத்தைக் குறைத்திடவும், நீடித்த நிலையான புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டு, வேளாண்மையில் நீர்ப்பாசனம் செய்யும் நோக்கில், மின்சார இணைப்பு இல்லாத உழவர்களுக்கு, தனித்து, சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் மானியத்தில் அமைத்துத் தரப்படும். இத்திட்டத்தில், 2025-26ம் ஆண்டில் 1,000 உழவர்கள் பயனடையும் வகையில் சூரியசக்தி பம்புசெட்டுகள் சிறு, குறு, ஆதிதிராாவிடர், பழங்குடியினர் உழவர்களுக்கு 70 சதவீத மானியத்திலும், இதர உழவர்களுக்கு 60 சதவீத மானியத்திலும் ரூபாய் 24 கோடி செலவில் அமைத்து தரப்படும்.

The post தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் இயற்கை வேளாண்மை பரவலாக்க ரூ.12 கோடி appeared first on Dinakaran.

Related Stories: