கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் பலி திருமலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நேரில் ஆய்வு

திருமலை: திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நேரில் ஆய்வு செய்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கான இலவச சர்வதரிசன டோக்கன் வழங்கிய போது கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அரசுக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா தலைமையில் சிறப்பு விசாரணை கமிட்டியை அரசு நியமனம் செய்தது. இந்த கமிட்டி 6 மாதங்களுக்குள் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளது.

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா தலைமையிலான குழு திருப்பதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பூங்கா, டிக்கெட் கவுண்டர் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு செய்தனர். தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமலா ராவ் மற்றும் திருப்பதி எஸ்பி ஹர்ஷவரத ராஜு ஆகியோரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். நேற்று திருமலையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் வரிசைகள், வைகுண்டம் காம்ப்ளக்ஸ், ரிங் ரோட்டில் உள்ள வரிசைகள் உள்ளிட்டவைகளை விசாரணை குழு நேரில் ஆய்வு செய்தது. அப்போது கூடுதல் செயல் அதிகாரி வெங்கைய்ய சவுத்திரி விசாரணைக்குழுவை நேரில் அழைத்து சென்று விளக்கம் அளித்தார். இந்த விசாரணை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

The post கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் பலி திருமலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: