அமெரிக்கா, ஈராக் உளவுத்துறை அதிரடி ஈராக்கில் வான்வழி தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் தலைவன் பலி: அதிபர் டிரம்ப் மகிழ்ச்சி

பாக்தாத்: அமெரிக்க படையும், ஈராக் உளவுத்துறையும் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதலில் ஈராக், சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவனாக செயல்படும் அபு கதீஜா படுகொலை செய்யப்பட்டார். சிரியா, ஈராக்கில் செயல்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவனாக இருந்தவர் அப்தல்லா மகி மோஸ்லே அல் ரிபாய் எனப்படும் அபு கதீஜா. ஐஎஸ்சின் உலகளாவிய செயல்பாடுகள் பிரிவின் தலைவனான இவர், திட்டமிடுதல், நிதி நிர்வாகம், போராளிகளை அனுப்பி வைத்தல் போன்ற பணிகளை கவனித்தவர்.

இவர் மேற்கு ஈராக்கின் அன்பார் மாகாணத்திற்கு வந்திருப்பதாக ஈராக் உளவுத்துறைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட இந்த வான்வழி தாக்குதலில் அபு கதீஜா கொல்லப்பட்டதாக அமெரிக்காவும், ஈரானும் உறுதிபடுத்தி உள்ளன. தாக்குதல் நடந்த இடத்தில் கிடைத்த மாதிரிகளை டிஎன்ஏ பரிசோதனை செய்ததன் மூலம் அபு கதீஜா மற்றும் ஒரு ஐஎஸ் முக்கிய நபர் கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது.

ஈராக் பிரதமர் முகமது ஷியா அல் சுடானி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இருள் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக ஈராக் தனது அற்புதமான வெற்றிகளை தொடர்கிறது. அபு கதீஜா ஈராக் மற்றும் உலகின் மிகவும் ஆபத்தான தீவிரவாதிகளில் ஒருவன்’’ என கூறி உள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘தப்பி ஓடிய ஐஎஸ் தலைவர் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளார். ஈராக் அரசுடனும் குர்தீஷ் பிராந்திய அரசுடனும் அமெரிக்காவின் துணிச்சலான போர் வீரர்களால் அவர் வேட்டையாடப்பட்டுள்ளார். வலிமையின் மூலம் அமைதி’’ என கூறி உள்ளார். பலியான கதீஜா உள்ளிட்ட இருவரும் அதிக ஆயுதங்களுடன் வெடிகுண்டுகள் நிரப்பிய உடைகளை அணிந்திருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2017ல் ஈராக்கில் இருந்து ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வீழ்த்தப்பட்டாலும், இன்னமும் சீலிப்பர் செல்கள் மூலம் அந்த அமைப்பு ரகசியமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்கா, ஈராக் உளவுத்துறை அதிரடி ஈராக்கில் வான்வழி தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் தலைவன் பலி: அதிபர் டிரம்ப் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: