×

சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது

சென்னை: சென்னையில் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். சீமான் வீட்டுக்கு செல்லும் பாதையில் 200 மீட்டருக்கு முன்பு பேரிகார்டுகள் அமைத்து தபெதிகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தந்தை பெரியாரை பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அவதூறான கருத்தை பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிட கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தபெதிக-வினர் 50க்கும் மேற்பட்டோர் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை நோக்கி சென்றனர். சீமான் வீட்டுக்கு செல்லும் பாதையில் 200 மீட்டருக்கு முன்பு பேரிகார்டுகள் அமைத்து தபெதிகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். சீமானுக்கு எதிராக தபெதிக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் முழக்கம் எழுப்பினர்.

அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட வந்த தபெதிக-வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை அருகில் உள்ள சமூதாயக்கூடத்திற்கு கொண்டு சென்றனர். சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது appeared first on Dinakaran.

Tags : Father Periyar Dravidar ,Kazhagam ,Seeman ,Chennai ,Father Periyar Dravidar Kazhagam ,Tamil Party ,Periyar ,
× RELATED ஜன.9-ம் தேதி சென்னை மற்றும் மதுரையில்...